Wednesday, October 16, 2024

இறைத்தூதர் ﷺ அவர்களை பின்பற்றுவதில் பேணப்பட வேண்டிய ஆறு விதிகள்

 இறைத்தூதர் ﷺ அவர்களை பின்பற்றுவதில் பேணப்பட வேண்டிய ஆறு விதிகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாக இன்று இறைத்தூதர் ﷺ அவர்களை பின்பற்றுவதில் நமது சமூகம் இரண்டு விதமான வழிமுறைகளை கையாளுகின்றன.


முதலாவது நபியவர்கள் மீது கொண்ட நேசத்தை மார்க்கம் கூறிய வரையறையில் செய்பவர்கள். 


இரண்டாவது நபி அவர்களை நேசிக்கும் விடயத்தில் எந்த வரையறையும் இல்லை, மனம் தோன்றிய அடிப்படையில் நேசித்துக் கொள்ளலாம் அது மார்க்கத்திற்கு முரணாக இருந்தாலும் சரி. 


முதலாவது வகையினர் மார்க்கத்திற்கோ சமூகத்திற்கோ அச்சுறுத்தலாக இருப்பதில்லை. 


ஆனால் இரண்டாவது வகையினர் மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுபவர்கள். 


அஷ்ஷேக் வலீத் அஸ்ஸயீதான் ஹஃபிழஹுல்லாஹ் நபியவர்களை பின்பற்றும் விடயத்தில் பேண வேண்டிய ஆறு அடிப்படை விதிகள் என்று நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் .


பொதுவாக வணக்க வழிபாடுகளில் மார்க்கம் விதித்திருக்கும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் பின்வரும் விதிகள் கவனிக்கத்தக்க ஒன்று. 


"வணக்க வழிபாடுகளின் அடிப்படை தடையாகும் / நிறுத்தி வைத்தலாகும்"


الأصل في العبادة المنع / التوقيف 


 திருக்குர்ஆனில் இருந்து ஆதாரம் 


اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ‌ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ‌ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏

அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் : 42:21)


"மார்க்கம் எதை தடை செய்திருக்கிறதோ அதை தவிர பழக்கவழக்கங்களின் அடிப்படைவிதி மன்னிப்பாகும்"


الأصل في العادات العفو فلا يحظر منها إلا ما حرمه الله


قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ‏

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக!

(அல்குர்ஆன் : 10:59)


ஆக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவதில் கீழ்க்காணும் ஆறு விதிகளை நாம் கடைபிடிக்கும் பொழுது மார்க்கத்தில் அனாச்சாரங்களை / பித்அதுகளை அத்துமீறல்களை தவிர்த்துக் கொள்ள முடியும்


💥முதலாம் விதி : (جنس العبادة -வணக்க வழிபாடு தொடர்பான விடயமாக இருக்க வேண்டும்) 


நாம் நபி அவர்களை பின்பற்றும் விடயங்கள் வணக்க வழிபாடுகளாக அதற்கு தொடர்பான விடயங்களாக இருக்க வேண்டும்.


இந்த விதியை கவனிக்கும் பொழுது நபி அவர்கள் மீது புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் சமூகத்தில் நிகழ்த்தப்படும் மீலாது மௌலிது போன்ற அனாச்சாரங்கள் நீக்கப்படும். 


காரணம் இந்த நிகழ்வுகள் வணக்க வழிபாடுகளாக கருதப்படுகின்றன. இந்த வகையான வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வின் தூதரோ நபித்தோழர்களோ சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்களோ கூறாத ஒன்று.


வணக்க வழிபாடுகள் என்பது அல்லாஹ்வும் தூதரும் நமக்கு கற்றுக் கொடுத்த விடையங்களாக மட்டுமே இருக்க முடியும்.


مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

 நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்.

(அல்குர்ஆன் : 59:7)


ஆக இறைத்தூதர் ﷺ அவர்கள் எதை ஏவி இருக்கிறார்களோ அதை செய்வதும் எதை தடுத்திருக்கிறார்கள் அதை விட்டு விலகி இருப்பதும் மட்டுமே இஸ்லாத்தில் வணக்க வழிபாடாக கருதப்படுகிறது. 


💥இரண்டாம் விதி :(سبب العبادة- வணக்க வழிபாட்டின் காரணம்) 


ஒரு வணக்க வழிபாட்டை செய்வதற்கு மார்க்கம் காட்டித் தந்த காரணம் ஒன்றே அனுமதியை தரும். 


எனவே மனம் தோன்றலில் நாம் மார்க்கமாக வணக்கமாக பார்க்கும் விடயங்களை மார்க்கப் பெயரில் அரங்கேற்றுவது அனாச்சாரமாகும்.


மார்க்கம் சொல்லித் தராத ஐந்து நேர தொழுகைக்கு பின் ஓதப் படும் கூட்டு துஆக்கள், கூட்டாக அமர்ந்து சப்தத்துடன் திக்ரு செய்தல், சில சந்தர்ப்பங்களில் ஆடுதல், இசையுடன் பாடுதல்,இறைநேசர்களுக்கு மதிப்பளிக்கிறோம் அவர்களை நேசிக்கிறோம் என்ற காரணத்தை முன்வைத்து கந்தூரி, சந்தனக்கூடு தூக்குதல் கொடியேற்றுதல், ஆண்களும் பெண்களும் தர்காவில் ஒன்று கூடுதல், மண்ணரைகளுக்கு சஜ்தா செய்தல், முத்தமிடுதல் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்தல்,

இன்னும் பல ஷிர்க்கான மார்க்கத்திற்கு புறம்பான விடயங்களும் இதில் வந்து சேரும்.


اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰٮةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌ‌ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَآءَ‌‌ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا‌ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ‏

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!

(அல்குர்ஆன் : 5:44)


💥மூன்றாம் விதி - (صفة العبادة -வணக்க வழிபாட்டின் முறை) 


நாம் செய்யும் வழிபாடுகள் இறைத்தூதர் ﷺ அவர்கள் கற்றுத் தந்த விதத்தில் அந்த அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். 


உதாரணமாக ஐந்து நேரத் தொழுகையில் நான்கு ரக்காத்துகள் தொழகும் தொழுகையில் ஒரு இரகத்தை கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது.


எந்த முறையில் நமக்கு தொழுது காட்டினார்களோ அந்த அடிப்படையில் தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டும். 


சில விசேஷமான தொழுகைகள் என்ற பெயரில் ரஜப் மாதத்திலும் ,ஷஃபான் மாதத்திலும் இரவு விழித்து வணங்குவது ஜமாத்தாக தொழுவது புத்தாடைகளை உடுத்திக்கொண்டு ஈதுகளை போல் அந்த நாட்களை கொண்டாடுவது போன்ற அனாச்சாரங்கள் இதில் அடங்கும்.


💥 நான்காம் விதி - (زمان العبادة -வணக்க வழிபாட்டின் காலம்) 


வணக்க வழிபாடுகளாக இருக்கும் பட்சத்தில் அதற்குரிய கால அளவை இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது, ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்துவிட்டால் நபிகளார் மீது புகழ் பாடுவது என்ற அடிப்படையில் மௌலிதும், மீழாது விழாக்களும் அந்நிய சமூகத்தினருக்கு நிகராகவே கொண்டாடப்படுகிறது, 


முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் ஷீஆக்களின் அனாச்சாரங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளாக பொதுமக்களிடத்தில் அறிமுகம் செய்து மார்க்கத்தில் இல்லாத எல்லா பித்ஆகளையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்கிறார்கள்.


💥 ஐந்தாம் விதி - (مكان العبادة -வணக்க வழிபாட்டின் இடம்) 


அல்லாஹ்வின் இல்லங்களில் துணை நிகழ்த்தப்பட வேண்டிய இபாதாதுக்களை, தர்காக்களிலும் மரணித்த சாலிஹீன்களின் மன்னரைகளிலும் அரங்கேற்றுகின்றனர். 


அல்லாஹ்விற்காக அறுக்கப்பட வேண்டிய குர்பானிகளை தர்காக்களில் அறுத்து பங்கிடுகின்றனர். 


💥 ஆறாம் விதி - (مقدار العبادة -வணக்க வழிபாட்டின் அளவு) 


மார்க்கம் விதித்திருக்கும் அடிப்படையில் நாம் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும், கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது. 


இரவு முழுவதும் தாங்கள் கற்பனையாக மார்க்கமாக நினைத்துக் கொண்டிருக்கும் சில விசேஷமான நாட்களில் நபி அவர்கள் மீது ஸலவாத்து சொல்கிறோம் என்ற பெயரில் விடிய விடிய விடி மௌலிது ஓதி காலையில் பஃஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு தூங்குவது போன்ற அனாச்சாரங்கள் நிறையவே நமது சமூகத்தில் பார்க்க முடிகிறது.


மேலே கூறியிருக்கும் இந்த ஆறு விதிகளை ேணும்பொழுது நபி அவர்களின் ஸூன்னாக்களை முறையாக பித்ஆக்கள் இன்றி பின்பற்ற முடியும்.


-தமிழில் 

உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி

No comments:

Post a Comment