Thursday, May 7, 2026

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்


ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?

கேள்வி 1 :

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?

(அல்லது) ரமழான் முழுவதும் நோன்பு நோற்க ஒரு நிய்யத் மாத்திரம் போதுமானதா.?

ஒருவர் எப்போது தனது நிய்யத்தை வைக்க வேண்டும்.?


பதில் :


நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :


إنما الأعمال بالنية و إِنَّمَا لِكُلِّ أَمْرِي مَا نَوَى

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.’

(📖 நூல் : ஸஹீஹ் புகாரி 1)


ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகும். எனவே, வெளிப்படையாக தெரிவது என்னவெனில் ஒருவர் ஒவ்வொரு நாளும் (தனித்தனியே) நிய்யத் வைக்க வேண்டும்.

சிலர் கூறுவதைப் போல நிய்யத் என்பது வாயால் மொழிவது அல்ல.! மாறாக, உள்ளத்தால் எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும்.


ஒரு நபர் சஹர் நேரத்தில் நோன்பு வைப்பதை நாடி (படுக்கையிலிருந்து) எழுவதே நோன்புக்கான நிய்யத்தாக கருதப்படும். அதேபோல உணவு மற்றும் பானத்திலிருந்து தவிர்ந்திருப்பதும் நோன்பிற்கான நிய்யத்தாக கருதப்படும்.

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா?

கேள்வி 2 :

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா?

மேலும் நிய்யத்தை சத்தமாக கூற அனுமதியுள்ளதா? அதேபோல, நோன்பை முறிக்கும் போது கூறவேண்டிய துஆக்கள் ஏதேனும் உள்ளதா? ஆம் எனில் அந்த துஆவை சத்தமாக ஓதலாமா?


பதில் :

நோன்பின் நிய்யத்தை வைப்பதற்கென (ஸுன்னாவில்) குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவுமில்லை.
நோன்பை முறிக்கும் போது கூறப்படும் துஆவை பொறுத்தளவில், அஹ்லுல் இல்ம் எனும் கல்வியாளர்களில் சிலர் கீழ்க்கண்ட துஆவை ஆதாரமாக கருதுகிறார்கள்.

” ذَهَبَ الظَّمأ وابتلت العُرُوقُ وثَبَتَ الْأَجْرُ إِن شَاءَ اللَّهُ”

“தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால், கூலி நிச்சயம்.” (நூல் : அபூதாவூத் 2357)
இருப்பினும், குறிப்பான துஆ என்று எதுவுமில்லை. உண்மையில், ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

فطره إن للصائم دَعْوَة مُسْتَجَابَة عَنْدَ

“நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆவிற்கு பதிலளிக்கப்படுகிறது”. (நூல் : ஸுனன் இப்னு மாஜா)
எனவே, நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும், இன்னபிற தேவைகளையும் துஆ செய்ய வேண்டும்.

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)


கேள்வி 3

பல வருடங்களாக தொடர் நோயின் காரணமாக ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் நபர் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?


📝 பதில் :

குறித்த நோயானது குணப்படுத்த முடியாதது என மருத்துவர்கள் கண்டறிந்தாலும், நிச்சயமாக அல்லாஹு தஆலா அதனை குணப்படுத்த ஆற்றலுடையவன்.

ஆனாலும், குறித்த நோயானது (அவ்வளவு எளிதில்) குணமாக்க முடியாதது என்று முடிவு செய்யப்பட்ட ஒர் நபர் மீது எவ்வித குற்றமுமில்லை. அந்நபர் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது அவசியமாகும்.

அல்லாஹு தஆலா கூறுவதாவது :

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ

“…. (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்…”

(அல்குர்ஆன் 2:184)

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 4 :

ரமழான் மாதத்தின் பகல் நேரங்களில் மிஷ்வாக், அல்லது பற்பசை (Toothpaste) பயன்படுத்துவது பற்றிய மார்க்கச் சட்டம் என்ன.?

📝 பதில் :

மிஷ்வாக் (குச்சிகளை) பயன்படுத்துவதைப் பொறுத்தளவில், அவைகள் மரத்தின் வேர்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது; அவைகளால் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை.
பற்பசைகளை (Toothpaste) பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவது ஹராம் என்று கூற என்னிடம் ஆதாரம் இல்லையென்றாலும், அவைகளை விட்டும் நாம் தவிர்ந்திருப்பது சிறந்தது என்றே நான் அறிவுரை கூறுகிறேன்.

மிகவும் முக்கியமானது என்னவெனில்,ஒரு நபர் (நோன்பின் போது) தன் வயிற்றுக்குள் எதுவும் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நபி ﷺ அவர்கள் கூறுவதாவது

وبالغ في الاستنشاق إلا أن تكون صائمًا

“உங்களில் ஒருவர் ஒழு செய்வதற்காக தம் மூக்கை சுத்தம் செய்யும்போது, தண்ணீரை மூக்கில் செலுத்த வேண்டும்; நோன்பாளியை தவிர…”

(நூல் : ஸுனன் அபூதாவூத் )

நோன்பாளியாக இருப்பவர் அவரது வயிற்றில் தண்ணீர் சென்று அதன் மூலமாக நோன்பு முறிந்துவிடுமோ என்று அவர் அஞ்சுவதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 5 :

நோன்பின்போது வாசனைத் திரவியம் அல்லது நறுமணம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன…?

📝 பதில் :

வாசனைத் திரவியம் அல்லது நறுமணத்தை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவதில் எவ்வித பிரச்சனையுமில்லை (இன்ஷா அல்லாஹ்…)

ஆனாலும், (அதிகமான) ஆல்கஹால் கலந்துள்ள Colognes போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; நிச்சயமாக இந்த வாசனைத் திரவியங்களில் ஆல்கஹால் கலந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. (ஆகையால் இவைகளைப் பயன்படுத்த அனுமதியில்லை).


📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 6:

திரவ வடிவில் காணப்படும் சொட்டு மருந்துகளை (Ear Drops, Eye Drops,…) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?

📝 பதில் :

இது விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாடுகளை விட்டும் நாம் தவிர்ந்துகொள்ளும் பொருட்டு, நான் கூறுவது என்னவெனில் (நோயாளியாக) இருக்கும் ஒருவர் தமது நோன்பை விடட்டும்.

அல்லாஹு தஆலா கூறுவதாவது :

وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ

“… உங்களில் யாரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணியாகவோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்….”
(அல்குர்ஆன் 2:184)

எவனே, ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருந்து மாத்திரைகளின்பால் தேவையுள்ளவராக காணப்பட்டால், அவர் தம்முடைய நோன்பை விட்டுவிட்டு அதனை வேறு நாட்களில் திரும்ப நோற்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.

ஆனால், (நோய்வாய்ப்பட்ட சமயத்திலும்) ஒருவர் தம் நோன்பை விட வில்லையானால், அவர் எடுக்கும் திரவ மருந்துகள் தம் தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).

📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)


கேள்வி 7:

ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் மருந்து ஊசிகளை (Injections) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?

பதில் :

அத்தகைய ஊசிகள் ஊட்டமளிக்கக் கூடியவையாக இருந்தால், அவைகளை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; அதே சமயம் ஊட்டமளிக்காத ஊசிகளை பொறுத்தளவில் அதனை பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

நான் முன்னர் கூறியது போல, நோயாளியாக இருப்பவர் நோன்பை விட்டுவிட்டு, அதனை வேறொரு நாட்களில் வைத்துக்கொள்வதே பொருத்தமானதாக கருதுகிறேன்.

கேள்வி 8:

ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..?

📝 பதில் :

மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது.

ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :

مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ، و مَنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ

“(வேண்டுமென்றே இல்லாமல் எதேச்சையாக) ஒருவர் வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க தேவையில்லை. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க வேண்டும்.”

பார்க்க : [முஸ்னத் அஹ்மத் 10463, அபூதாவூத் 2380, திர்மிதீ 720 || இமாம் அல்பானி رحمه الله அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என இர்வாவுல் ஙலீல் (4/51)-ல் கூறியுள்ளார்கள்].


கேள்வி 9:

ரமழானின் பகல் நேரத்தில் நீச்சல் மற்றும் Diving செய்வதன் மார்க்கச் சட்டம் என்ன..?

📝 பதில் :
(அவ்வாறு செய்யலாம்), ஆனாலும் தண்ணீர் அவரது தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியமானது.

குறித்த நபர் கடலில் குளிக்கும்போது கடல்நீர் உப்பாக இருந்தால், அது தொண்டையை சென்றடைய வாய்ப்புள்ளது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் கடலில் நீந்தியுள்ளேன்; நாம் கவனிக்காத போது கடல்நீர் நம் தொண்டையை அடைந்துவிடும். எனவேதான் (நோன்பு நோற்ற நிலையில்) கடலில் குளிப்பதை தவிர்க்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.

கடல்நீர் உப்பாக இல்லாவிட்டால், அது நம் தொண்டையை அடையாது, எனினும் சிலபோது அவ்வாறு அடைய வாய்ப்புள்ளது.

📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 10

நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.?

📝பதில் :

அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).

கேள்வி 11:

ரமழானின் பகல் பொழுதில் (நோன்பு நோற்ற நிலையில்) தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?


📝பதில் :

நபி ﷺ அவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :

“அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ﷺ) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றார். நபி (ﷺ) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ﷺ) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள்.. அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக்கூடையாகும். நபி (ﷺ) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய(வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது? உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடைய வீட்டார் எவருமில்லை என்று கூறினார், அப்போது நபி (ஸல்) அவர்கள் போ! (போய்) உன் வீட்டாருக்கு இதை உண்ணக் கொடு என்று கூறினார்கள்.”

(நூல் : ஸஹீஹ் புகாரி 2600)

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில்,

✅ நோன்பு நோற்ற நிலையில் உடலுறவு கொண்ட நபரிடம் அடிமைகள் இருந்து அதனை அவர் விடுவிக்க முடியுமாக இருந்தால், அவர் அதனை செய்யட்டும்;


✅ அவ்வாறு முடியாவிட்டால், அவர் தொடர்ச்சியாக 2 மாதங்கள் நோன்பு நோற்கட்டும்.

✅ நோன்பு நோற்க சக்திபெறாதவர், அதற்கு பகரமாக 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

✅ நோன்பு நோற்க சக்திபெற்றுள்ள நபர், ஏழைகளுக்கு உணவளிக்க முடியாது. ஏனெனில் ஏழைகளுக்கு உணவளிப்பதானது வசதியுள்ள ஒருவருக்கு மிக லேசான காரியமாகும்; அதேசமயம் 2 மாதம் நோன்பு நோற்பதானது கடினமானதாகும்.

📝மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 12:

ரமழானின் பகல் பொழுதில் தூக்கத்தின்போது கனவு ஏற்பட்டு, அதன்மூலம் விந்து வெளியேறினால் அதனுடைய சட்டம் என்ன.?

பதில் :

அவர் மீது எந்த குற்றமுமில்லை; அவர் அன்றைய நோன்பை முழுமைப்படுத்தட்டும்.

மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

கேள்வி 13 :
ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

பதில்:

🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:

▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.
▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
▪️ அவர்கள் வேறொரு நாளில் அந்த நோன்புகளை கழா செய்ய வேண்டும்.
▪️ அதேபோன்று எப்போதும் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகளும் இருக்கின்றார்கள்.
▪️ அவர்கள் நோன்பு நோற்றால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
▪️ அப்படிப்பட்டவர்கள் நோன்பு நோற்பதை தவிர்த்து ஒவ்வொரு நோன்பிற்க்கும் ஃபித்யா (ஒரு ஏழைக்கு உணவளிக்க) வேண்டும்.இதுவே அந்நோன்புக்கான பரிகாரமாகும்.


Friday, April 24, 2026

“வஹீ” எனும் இறை வெளிப்பாடு / இறை செய்தி

மனிதன் தனது அறிவால் மட்டும் சரியான வாழ்க்கை வழி (நேர்வழி) எது என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அதற்காக அல்லாஹ்விடமிருந்து வரும் “வஹீ” (இறை வெளிப்பாடு / இறை செய்தி) அவசியம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வருவதற்கு முன்பே உலகில் பல தத்துவஞானிகள் (philosophers) இருந்தார்கள். அவர்கள் மிகுந்த அறிவாளிகள் தான். ஆனாலும், அவர்கள் தங்கள் அறிவை மட்டும் பயன்படுத்தி சிந்தித்ததால், முழுமையான உண்மையான நேர்வழியை அடைய முடியவில்லை.

அதாவது:

1. மனித அறிவுக்கு எல்லை இருக்கிறது

2. இறைவன் காட்டும் வழிகாட்டுதல் (வஹீ) இல்லாமல் முழு உண்மையை அடைய முடியாது

3. அதனால்தான் நபிமார்கள் வழியாக இறைவன் மனிதர்களுக்கு சரியான பாதையை காட்டுகிறான்.



இறைத்தூதர்கள்


இறைத்தூதர்கள் என்பது அல்லாஹ் தனது அடியார்களிடம் அனுப்பும் தூதர்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். அந்த கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் கிடைக்கும் இன்பங்களைப் பற்றி மக்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள். அதேபோல், அவன் தடை செய்தவற்றை மீறினால் கிடைக்கும் நிரந்தர தண்டனையைப் பற்றி எச்சரிக்கையும் செய்கிறார்கள். மேலும், கடந்த கால மக்களின் வரலாறுகளை, அவர்கள் இறைவனின் கட்டளைகளை மீறியதால் இந்த உலகில் சந்தித்த தண்டனைகளையும் எடுத்துரைக்கிறார்கள்.

இந்த வகையான தெய்வீக கட்டளைகள் மற்றும் தடை செய்யப்பட்ட விஷயங்களை மனிதர்கள் தங்களின் சிந்தனையால் மட்டும் அறிந்து கொள்ள முடியாது. அதனால், அல்லாஹ் மனிதர்களை மதித்து, அவர்களின் நலன்களை பாதுகாக்கும் விதமாக சட்டங்களையும் கட்டளைகளையும் அமைத்துள்ளான். ஏனெனில், மனிதர்கள் தங்கள் ஆசைகளைப் பின்பற்றும்போது, அவர்கள் எல்லைகளை மீறி, பிறருக்கு தீங்கு விளைவித்து, அவர்களின் உரிமைகளை பறிக்கும் வாய்ப்பு உள்ளது.


Friday, April 3, 2026

ஆடை அணிவது பற்றிய சட்டங்கள்

 ஆடை அணிவது பற்றிய சட்டங்கள்.


ஷரீஅத் சட்டங்கள்

ஆண்கள் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையேயுள்ள மேனியை மறைப்பதும், பெண்கள் முகத்தையும் இரு மணிக் கட்டுகளையும் தவிர உள்ள முடியும், நகமும் உட்பட மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்திட வேண்டும்.

1. '(பெண்களாகிய அவர்கள் தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவை தவிர (ஆடை ஆபரணம் போன்ற) தங்கள் அலங்காரத்தையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.' – அல்குர்ஆன் 24:31

இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்

'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.

2. 'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)

3. பெருமை கொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ; இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1653)

4. 'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமாக ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது, பெண்கள் அதிகமாக அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அதை ஆண்கள் அணியக் கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5. ஒரு பெண் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசி செல்வது கூடாது. வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை.

6. 'அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்' எனக் கூறுகிறது அல்குர்ஆன்.

அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷூக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.

பர்தா -ஹிஜாப்

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

அல்லாஹ் கூறுகிறான்: '(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்:24:31)

''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்:33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல்வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்றவற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

'அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.'(அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!' (அல்குர்ஆன்: 33:59)

'நாங்கள் நபி(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்' என ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

மறைந்தவர்களை ஜியாரத் செய்யும் விதத்திலும் ஸஹாபிப் பெண்கள் பேணிய ஹிஜாப்பிற்கு ஆதாரமாக உள்ள ஹதீதை பாருங்கள்:

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)

'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவூத்)

இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.

பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:

'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் என்ற நபித்தோழர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் முகத்தை மறைத்துக்கொண்டார்கள்.

ஸப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னாஆல்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 4750)

'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' என்பதில் அடங்கும்.

மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள், ஹதீதுகளில் அடிப்படையில் அமையப் பெற்றதே பர்தாவாகும். இதில் தற்போது கறுப்பு கலரில் பெண்கள் நடைமுறையில் பர்தா உடுத்தி வருகின்றனர். இது வஹ்ஹாபியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நாம் வஹ்ஹாபிகளுக்கு மாற்றமாக கறுப்பு கலரைத் தவிர ஏனைய கலரில் பர்தா அணிவது ஏற்றமானது. மேலும் விஞ்ஞான ரீதியாகவும் கறுப்பு கலர் வெயிலுக்கு ஏற்றதல்ல. அதே போல் துக்கத்தின் அடையாளமாகவும் கறுப்பு இருக்கிறது கவனிக்கத்தக்கது.

பயன்கள்:

பெண்கள் மேற்குறிப்பிட்ட குர்ஆன், ஹதீது சொன்னபடி உள்ள சரீயத் சட்டங்களை பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;.

ஆண்களின் ஆடை – சட்டதிட்டங்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடை முழங்காலுக்கும் பரண்டை (கணு)க் காலுக்கும் நடுவிலும், அவர்களுடைய சட்டைக் கை மணிக்கட்டுக்கு மேலுமாக இருந்தது.

சரீரத்தை எடுத்துக் காட்டும் (மஸ்லின் அல்லது ரவைசல்லா எனப்படும்) கவனியாலும், பளிங்கு போன்ற பொருட்களினாலும் ஆடை அணிவது கூடாது. துப்புரவான தோலாக இருப்பினும், காகிதம் போன்றவையாக இருப்பினும் அதில் ஆடை அணிவது கூடும்.

பருத்தியும் பட்டும் சமமாக இருக்கின்ற துணியை அணிவது மக்ரூஹ் ஆகும். கொஞ்சமேனும் பருத்தி அதிகம் இருப்பின் மக்ரூஹ் அல்ல.

ஆண்கள் அழகிய ஆடை அணிந்து, தலைப்பாகை கட்டி, அதில் தொங்கல் விட்டு மேலே போர்வை அணிந்து, தலைவழியப் பச்சைப் போர்வையிட்டுத் தொழுவது சுன்னத்தாகும்.பெருமையை நாடி காலிலும், கையிலும் தொங்கும்படி உடையணிவது ஹராம் ஆகும். பெருமையை நாடவில்லையானாலும் அவ்வாறு அணிவது மக்ரூஹ் ஆகும்.

வேறு உடையில்லாத போது நஜீஸான உடையைக் கொண்டேனும், பட்டாடையைக் கொண்டேனும் (தனிமையிலிருந்தாலும்) மானத்தை மறைப்பது வாஜிபாகும். ஆண்கள் முன்,பின் துவாரத்தை மறைத்துக் கொள்வதும், பெண்கள் முழங்கால் முதல் தொப்புள் வரை மறைப்பதும் வாஜிபாகும்.

குளிக்கும்போதோ, வீடு போலுள்ளவற்றைப் பெருக்கும்போது புழுதியை விட்டு காத்துக் கொள்வதற்கோ, அல்லது புழுக்கமான நேரத்தில் குளிர்ச்சியை உண்டாக்கிக் கொள்வதற்காகவோ, தனித்திருக்கும் போது அவ்ரத்தைத் திறந்து கொள்ளலாம். எவ்வித் தேவையுமின்றி ஆண்கள் தொடையையும், பெண்கள் முதுகுப் பகுதியையும் திறந்திப்பது மக்ரூஹ் ஆகும்.

அழுக்குத் துணியும் கறுப்பு நிறமுள்ள காலணியும் வறுமையை உண்டாக்குமென கமாலுத்தீன் திம்யரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

தொழுகையல்லாத நேரத்தில் ஈரமில்லா பொழுது நஜீஸ் பட்டிருக்கும் உடையை அணியலாம். பருவமடைந்த ஆண்கள் பட்டாடையை அணிவது, உபயோகிப்பது, போர்த்திக் கொள்வது, விரிப்பாக்குவது, மானத்தை மறைப்பதற்கு உபயோகிப்பது ஆகியவை ஹறாமாகும். ஆனால் பட்டுத்துணியின் மீது பருத்தித் துணியை அது மெல்லியதாக இருப்பினும் விரித்து அதில் உட்காரலாம்.

பெண்களும் பட்டுத் துணியால் திரை போடுவதும், அதனால் சுவர்களை அலங்கரிப்பதும் ஹராம் ஆகும். ஆண்கள் தங்களின் துணிகளின் ஓரங்களில் பட்டினால் ஆன துணியை நெய்து அணிந்துகொள்ளலாம்.

குங்கும நிறம் கொண்ட சந்திர காவி நிறமும், குசும்பாவெனும் வெண்மை கலந்த சிவப்பு நிறமும் ஆண்கள் அணிவது ஹராம்.

உடைகளில் மிக ஏற்றமானது பெருநாளல்லாத நாளில் வெள்ளை நிறமாகும்.வெள்ளைக்கு அடுத்தது பச்சை நிறமாகும். சொர்க்கத்தின் உடை பச்சை நிறமுள்ளதாகும். பெருநாளில் மிகவும் ஏற்றமானது விலை உயர்ந்த ஆடையாகும்.

மார்க்கத்தில் கூறப்பட்ட பலன் இல்லாமல் சொரசொரப்பான துணியை அணிவது மக்ரூஹ்.

மோதிரம் அணிவது:

ஆண்கள் வெள்ளியினால் ஒரு மோதிரம் அணிவது சுன்னத், அதை வலக்கரத்தில் அணிவது ஏற்றம். அதை சுண்டுவிரலில் அணிவது மற்றொரு சுன்னத். வலக்கரத்தின் சுண்டுவிரலில் அணிவது ஏற்றமானது. ஃபைரோஜ் கல் வைத்த மோதிரம் அணிவது நல்லது. அந்தக் கை பரக்கத்தை விட்டும் நீங்காது எ ன்றும், அகீக் கல்லினால் அதிகமான பலன்களுண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு கையில் ஒரு மோதிரத்தை விட அதிகப் படுத்தக் கூடாது. மோதிரத்தின் அளவு உலக வழக்கில் அது கடப்பானது என்று சொல்லாத அளவிற்கு இருக்க வேண்டும். இரும்பு, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களாலும் மோதிரம் அணியலாம்.ஆனால் இரும்பு மோதிரம் அணியக் கூடாது என்று ஒரு பலவீனமான ஹதீது உள்ளது.

காற்சட்டையோ, கைலியோ அணிவதில் சுன்னத்தாவது: காலின் குதிரை முகத்தில் பாதி வரை தாழ்த்திக் கட்டுவதாயிருக்கும். பரண்டை முளி வரை (கணுக்கால் வரை) கட்டுவதில் சுன்னத் விடுபட்டு விடும். சட்டைக் கையை மணிக்கட்டு வரை தாழ்த்திக் கொள்ளலாம். தலைப்பாகையின் பின்புறத் தொங்கலை முதுகின் நடுவில் தொங்க விடுவது, வலப்புறத்தில் தொங்க விடுவதை விட சிறந்ததாகும்.

ஜும்ஆ நாளில் தலைப்பாகை அணிபர்கள் மீது அல்லாஹ்வும், அவன் மலக்குகளும் சலவாத்துச் சொல்வார்கள் என்றும், தலைப்பாகை அணிந்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவது தலைப்பாகை அணியாமல் எழுபது ரக்அத் தொழுவதை விடச் சிறந்தது என்றும் ஹதீதில் வந்துள்ளது.

தஸ்பீஹ் மணிக்கு பட்டினால் குஞ்சம் போடுவது கூடாது. பணம் வைப்பதற்காக பட்டினால் வட்டுவம் செய்வது ஆகும். குர்ஆனுக்கு பட்டினால் உறை போடுவது ஆகும். பட்டுத்துணியால் மேற்கட்டி கட்டுவது ஆண், பெண் அனைவருக்கும் ஹராமாகும்.

ஆடைகளை அணியும் போது வலப்புறத்தையும், கழட்டும் போது இடப்புறத்தையும் முற்படுத்துவது சுன்னத்.

Copied From  - https://www.facebook.com/vajhil001

Sunday, January 25, 2026

நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்?

 நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்?


மனிதர்களில் பலர் நோன்பின் உண்மை நிலையை தவறாக புரிந்து கொண்டு உண்பதிலும், பருகுவதிலும், உணவு வகைகளை செய்வதிலும், இரவில் வெகுநேரம் விழித்திருந்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செலவிடுகிறார்கள். 

நோன்பின் உண்மை இபாதத்தையும், தக்வாவையும் அதிலிருந்து எடுத்துவிட்டு, அதை கண்ணிற்கும் வயிறுகளுக்குமானதாக மாற்றிவிட்டார்கள்.

மற்றும் பலர் நோன்பின் முக்கியத்துவத்தை உணர்துள்ளனர், ஷாபான் மாதத்திலிருந்தே அதற்கான ஆயத்தம் செய்கிறார்கள், இன்னும் சிலர் அதற்கு முன்னரே செய்கிறார்கள். 

நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்?  ரமழானுக்கு ஆயத்தம் ஆக 10 குறிப்புகளை குறிப்பிடுகிறோம்:

1. உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது

இது எல்லா நேரங்களிலும் கடமையானதாகும். ஆனால் மகத்தான மற்றும் புனிதமான பரகத் நிறைந்த ரமலான் மாதம் நெருங்கி வருவதால், உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மற்றும் உங்களுக்கும் பிற மனிதர்களுக்கும் இடையே உள்ள பாவத்திலிருந்து பாவமன்னிப்பு பெறுவது முக்கியமானது. அப்போது தான் புனிதமான மாதம் தொடங்கும் போது, நீங்கள் தூய்மையான உள்ளத்துடன், மன அமைதியுடனும் நற்செயல்களில் ஈடுபட முடியும்

அல்லாஹ் கூறுகிறான்:

وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

மேலும், முஃமின்களே! ( நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

(அல் நூர் : 24:31)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5235.

2) துஆ (பிரார்த்தனை)

ஒரு முஸ்லிம் தனது இறைவனிடம் ரமழான் மாதத்தை வலுவான இறையச்சத்துடன், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் அடைய வேண்டும் என்று கேட்க வேண்டும், மேலும் அந்த மாதத்தில் அவனுக்கு கட்டுப்பட்டு அமல்கள் செய்வதற்கு அவன் உதவ வேண்டும் என்றும், மேலும் தனது நற்செயல்களை ஏற்றுக்கொள்ளும்படியும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும்.

முன் சென்ற நல்லோர்கள் (ஸலஃப்கள்) தாங்கள் ரமழான் மாதத்தை அடைய வேண்டும் என்று ஆறு மாதங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்,  பின்னர் ஐந்து மாதங்கள், (ரமழான் மாதத்தில்) அவர்கள் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுகொள்ள வேண்டும் என்று துஆ செய்வார்கள்.

3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது

ஒரு முஸ்லீம் ரமலான் மாதத்தை அடைவது அல்லாஹ் அந்த அடியாருக்கு வழங்கும் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். ஏனென்றால் ரமலான் மாதத்தின் வருகை என்பது சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல் மூடப்படும் நல்ல சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். மேலும் இது குர்ஆனின் மாதமாகும், இந்த மாதத்தில் தான் முஸ்லிம்கள் பல போர்களில் வெற்றிகண்டுள்ளனர்.

 قُلْ بِفَضْلِ ٱللَّهِ وَبِرَحْمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا۟ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.

அல்குர்ஆன் 10:58

4) விடுபட்ட கடமையான நோன்புகளை நோற்பது

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.

ஸஹீஹ் புகாரி : 1950.

ஷஅபானில் அதைச் செய்ய அவர்கள் குறிப்பாக இருந்ததில் இருந்து, அடுத்த ரமழான் வரை அவற்றைத் தாமதப்படுத்துவது அனுமதிக்கப்படாது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலனி (ரஹ்) கூறியுள்ளார்கள்.

ஃபதஹ் அல் பாரி-4/191

ஆண்கள் பிரயாணத்தின் காரணமாக விட்டிருக்கலாம். பெண்கள் மாதவிலக்கின் காரணமாக விட்டிருக்கலாம். இவ்வாறான நிலமையில் இருப்பவர்கள் தமது வேலைப்பளுவின் காரணமாக இதுவரை விடுபட்ட நோன்பை நோற்காமால் இருந்தால் ரமலான் ஆரம்பிப்பதற்கு முன் அந்த நோன்புகளை கழா செய்ய வேண்டும்.

5) ரமழானின் சிறப்புகளை புரிந்துகொள்வதற்கும், நோன்பின் சட்டங்கள் அறிந்து செயல்படுத்துவதற்கும் மார்க்க அறிவை தேட வேண்டும்.

6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய  பணிகள் எதேனும் இருந்தால் அதை விரைந்து முடிக்க வேண்டும்

7) உங்களது குடும்ப உறுப்பினர்களான- மனைவி-குழந்தை ஆகியோர்களுடன் உட்கார்ந்து நோன்பின் சட்டங்களை எடுத்துரைப்பது. மேலும், குழந்தைகளை நோன்பு நோற்குமாறு ஊக்குவிக்க வேண்டும்

8) வீட்டிலேயே படிக்கக் சில எளிய புத்தகங்களைத் ஏற்பாடு செய்தல்

9) ஷஃபான் மாதத்தில் சில நோன்புகளை நோற்று ரமலான் மாதத்திற்கு தயாராவது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’

ஸஹீஹ் புகாரி : 1969

யா ரஸூலுல்லாஹ், நீங்கள் ஷஅபானை விட வேறு மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்று நான் பார்த்ததில்லையே? என்று கேட்டேன். அதற்கு நபி ﷺ அவர்கள் இது ரஜப் மற்றும் ரமலானுக்கு இடைப்பட்ட இந்த மாதம், மக்கள் அதிகமாக கவனம் செலுத்தாத மாதமாகும்.இம்மாதம் அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்ற மாதம். நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்

அறிவிப்பவர்-உஸாமா பின் ஸைத்(ரலி)

சுனன் நஸாயி-2357

இமாம் நாசிருதீன் அல்பானி (ரஹ்) ஹஸன் தர செய்தி என்று தனது ஸஹீஹ் அல் நஸாயி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஹதீஸ் ஷஅபான் நோன்பின் சிறப்பை விளக்குகிறது, அதாவது இம்மாதத்தில் செய்யபடுகின்ற நற்செயல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படுகின்றன என்பது. சில அறிஞர்கள் வேறு சில காரணங்களும் கூறுகிறார்கள். இந்த நோன்புகள் கடமையான தொழுகைக்கு முன்பு நிறைவேற்றப்படும் சுன்னத்தான தொழுகை போன்றது. சுன்னத்தான அமல்கள் அவர்கள் உள்ளத்தை கடமையான அமல்களை செய்ய தயார்படுத்துகிறார்கள். ரமழானுக்கு முன்பு நிறைவேற்றப்படும் ஷஅபான் நோன்பிற்கும் அது பொருந்தும்.

10) குர்ஆன் ஓதுதல்:

ஷஅபான் மாதம் தொடங்கி விட்டால், அம்ர் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் கடையை அடைத்துவிட்டு குர்ஆன் ஓதுவதற்கு நேரத்தை ஒதுக்குவார்கள்
ஷஅபான் மாதம் குர்ஆன் ஓதுபவர்களின் மாதமாகும் என்று ஸலாமா இப்னு குஹைல் (ரஹ்) கூறுகிறார்கள்.

ரஜப் மாதம் பயிர்கள் நடுவதற்கான மாதமாகும், ஷஃபான் மாதம் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் மாதமாகும், ரமழான் மாதம் பயிர்களை அறுவடை செய்யும் மாதமாகும் என்று அபுபக்கர் அல் பல்கீ(ரஹ்) கூறியுள்ளார்கள்

மேலும் அவர்கள் கூறினார்கள், ரஜப் மாதத்திற்கு ஒப்பாக காற்றும், ஷஅபான் மாதத்திற்கு ஒப்பாக மேகமும், ரமலான் மாதத்திற்கு ஒப்பாக மழையுமாகும்.

ரஜபில் நடவு செய்யாமல், விதைக்காமல், ஷஅபானில் நீர் பாய்ச்சாமல் இருப்பவர் ரமலானில் எப்படி அறுவடை செய்வார்? இப்போது ரஜப் நம்மை விட்டு கடந்துவிட்டது. நீங்கள் ரமலானை தேடினால் ஷஅபானில் என்ன செய்வீர்கள்? இந்த அருள்மிகு மாதத்தில் உங்கள் நபியும், உம்மத்தின் ஆரம்ப தலைமுறைகளும் இப்படித்தான் இருந்தார்கள், நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் ?

https://islamqatamil.com