Tuesday, July 11, 2017

ஸலஃப் கொள்கை என்றால் என்ன ?

ஸலஃப் கொள்கை என்றால் என்ன ?
**************************************


நபி அவர்கள் கூறினார்கள் மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு அதற்கடுத்த தலைமுறையினர் (புகாரி)


ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள் ஆகிய மூன்று தலைமுறையினரை குறிப்பதற்கும், குறிப்பாக ஸஹாபாக்களை முன்னிலைப்படுத்துவதற்கு இஸ்லாமிய வழக்கில் ஸலஃபுகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.

அகீதா, இபாத்துகள், வியாபாரம், அணிகலன்கள், உணவுகள், நடைமுறைகள் ஆகிய அனைத்து விஷயங்களிலும், நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை பெற்ற ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்கள், எப்படி நடைமுறை படுத்தினார்கள் என்று பார்ப்பது மன்ஹஜ் ஸலஃப் ஆகும்.

ஆகவேதான் மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் நபி அவர்களின் ஹதீஸ்களோடு, ஸஹாபாக்களின் விளக்கத்தையும், நடைமுறையையும் சேர்த்து பதியப்பட்டிருப்பதை குர்ஆன் விரிவுரைகளிலும், ஹதீஸ் கிரந்தங்களிலும் காணலாம்.

உதாரணத்திற்கு இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்தில் இருபெருநாள் சட்டங்கள் எனும் பாடத்தில் ஒருவருக்கு பெருநாள் தொழுகை தவறி விட்டால் அவர் பெருநாள் தொழுகை போன்று இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என பாட தலைப்பிட்டு அதற்கு ஆதாரமாக நபி அவர்களின் ஹதீஸை பதியாமல், அனஸ் ரலி அவர்களின் அஃதர் எனப்படும் நடவடிக்கையை பதிவு செய்துள்ளார்கள்.

ஸஹாபாக்களின் விளக்கமும், நடைமுறையையும் அவசியம் ஏற்க வேண்டும் என்பதற்காக ஆதாரங்கள்.


وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا

அன்னிஸா 115 அத்தியாயம் –

இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்கு தெளிவானதன் பின்னர் எவர் தூதருக்கு மாறு செய்து, முஃமின்களின் வழியல்லாத (வேறு) வழியை பின்பற்றுவாரோ அவரை நாம் அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பி விடுவோம். அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.


இவ்வசனத்தில் அல்லாஹ், நேர்வழியை பற்றி கூறும் போது இரண்டு விஷயங்களை கூறுகிறான்.

1 – தூதரின் வழி
2 – முஃமின்களின் வழி

முஃமின்களின் வழிக்கு மாற்றமாக செல்வதும் ஒருவரை வழிகேட்டின் பக்கம் கொண்டு சென்று நரகத்தில் தள்ளும் என்கிறான்.

முஃமின்கள் யாரை குறித்து கூறப்பட்டுள்ளது, முஃமின்கள் என்ற நிலை அடைந்தவர்கள் இவ்வசனம் இறங்கும் போது யாராக இருந்தார்கள்?

ஸஹாபாக்கள் தான் இருந்தார்கள். அவர்களை குறித்து தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்துவதற்கு நபி அவர்களின் ஹதீஸை பாருங்கள்.

நபி அவர்கள் கூறினார்கள், என்னுடைய உம்மத் 73 கூட்டமாக பிரியும். அனைத்தும் நரகத்திற்கு செல்லும் ஒரேயொரு கூட்டத்தாரை தவிர. அவர்கள் யார் என நபி அவர்களிடம் ஸஹாபாக்கள் கேட்ட போது நபி அவர்கள் பதிலளித்தார்கள், நானும் எனது ஸஹாபாக்களும் எதன் மீது உள்ளோமோ அவர்களே வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டத்தினர் என்றார்கள். ( திர்மிதி)

இந்த ஹதீஸில் நபி அவர்கள் தன்னோடு ஸஹாபாக்களையும், சேர்த்து கூற வேண்டிய அவசியம் என்ன?

1 – ஸஹாபாக்கள் நபி அவர்களிடமிருந்து மார்க்கத்தை நேரடியாக கற்றார்கள்.
2 – அல்குர்ஆன்,சுன்னாவில் வந்துள்ள தகவல்கள் எங்கே இறங்கியது, யார் குறித்து பேசுகிறது, என்ற காரணங்களை அறிந்தவர்கள்.
3 – அல்குர்ஆன், சுன்னாவில் தெளிவு, சந்தேங்களுக்கு நேரடியாக நபி அவர்களை அணுகினார்கள்.

மார்க்கத்தை விளங்குவதற்கு ஸஹாபாக்களின் விளக்கமும், நடைமுறையும் மிக அவசியமாக இருக்கிறது. ஆகவேதான் நேர்வழியில் இருப்பவர்கள் ஸஹாபாக்களின் விளக்கத்தை ஏற்று பின்பற்றினார்கள்.

இமாம் அஹமத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்,

أُصولُ السُنة عندنا التمَسُك بما كانَ عليهِ أصحابُ رسول الله- صلى الله عليهِ وسلم- والإقتداء بهم

எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படை என்பது, அல்லாஹ்வின் தூதர் அவர்களின் ஸஹாபாக்கள் எதன்மீது இருந்தார்களோ அதுவும், அவர்களை பின்பற்றுவதுமே ஆகும்.


இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகெட்ட கூட்டங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஸஹாபாக்களின் விளக்கத்தை பின்பற்றாதவர்களாகவும், சுய விளக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாகவே இருப்பார்கள்.


உதாரணத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கவாரிஜ்களிடம் பேச செல்லும் போது கூறினார்கள், உங்களிடம் ஒரு ஸஹாபியும் இல்லையே என்றார்கள்.

ஸலஃப்பிய்யா என்பது ஸஹாபாக்களின் கூட்டமைப்பை பற்றி பிடிப்பதும், அதில் அவர்களை பின்பற்றி நடப்பதுமே ஆகும். அல்லாஹ்வே ஸஹாபாக்களை உறுதியான முறையில் பின்பற்ற சொல்கிறான். பார்க்க அல்குர்ஆன் அத்தியாயம் அத்தவ்பா 9:100 வசனத்தில்

எவர்கள் ஸஹாபாக்களை உறுதியான முறையில் பின்பற்றினார்களோ என அல்லாஹ் கூறுகிறான்..

4:115 வசனத்தில் முஃமின்களின் ஸஹாபாக்களின் பாதையை பின்பற்றாமல் இருப்பவர்கள் நரகத்தில் நுழைவார்கள் என்கிறான்.

அரபியில் இத்திபா என்றால் பின்பற்றுவதையே குறிக்கும். அல்லாஹ்வே ஸஹாபாக்களை பின்பற்ற சொல்கிறான். ஏன் என்றால் ஸஹாபாக்கள் தங்களுக்கென ஒரு புது வழியை இயக்கத்தை உண்டாக்காமல் அல்லாஹ்வின் தூதரை அச்சொற்றாக பின்பற்றியவர்கள். அதனால்தான் அல்லாஹ்வும் ரஸுலும் அவர்களை பொருந்திக்கொண்டேன் என்று கூறுகின்றார்கள்.


அல்லாஹ்வும் ரஸுலும் பொருந்திக்கொண்ட ஒரு கூட்டத்தை நாம் பொருந்திக்கொண்டு பின்பற்றினால் சுவனம் நமக்கு நிச்சயம் இன்ஷாஅல்லாஹ் .

எனவே நபிவழி என்பது அது ஸஹாபாக்களின் வழிதான்
அது அல்லாத வழி வழிகேடான வழியாகும்.

நாச்சியார்கோவில்

MS. ரஹ்மத்துல்லாஹ்

Monday, January 23, 2017

அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்!
அத்தஹியாத் இருப்பில் சிலர்  விரலசைப்பதும் சிலர் அசைக்காமல் இருப்பதுமான நடை முறை உம்மத்தில் இருந்து வந்தது.
குர்ஆன் ஹதீஸ் வழியில் பிரச்சாரங்கள் செய்த ஷைக்  அல்பானி(ரஹிமஹுல்லாஹ்)அவர்கள் விரலை அசைப்பது நபிவழி என்று தவறுதலாக புரிந்து கொண்டு அதைப் பிரச்சாரமும் செய்தது தான் மக்கள் மத்தியில் அது  தீவிரமாக  பரவ காரணமானது. எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் மனிதர் என்ற அடிப்படையில் சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான்.
அத்தஹியாத் இருப்பில் விரலசைப்பதற்கு காட்டப்படும் ஆதாரங்கள் பலவீனமானவை, சந்தேகத்துக்குரியவை என்பதற்கான ஆதாரங்களை
தருகிறேன்.
விரலசைப்பதற்கு ஆதாரமாக காட்டப்படும் ஹதீஸ், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அசைத்ததை வாயில் பின் ஹுஜ்ர் (ரழியல்லாஹு அன்ஹு)என்ற நபி தோழர் பார்த்ததாக
குறிப்பிடுகிறது. இந்த நபிமொழி, அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் பலவீனமான நபிமொழியாகும். அத்துடன் கருத்தும் மற்ற வலுவான ஆதாரங்களுக்கு ஒத்து வரவில்லை.
அறிவிப்பாளர் பிரச்சனை: ஒன்று
இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஆஸிம் பின் குலைப் என்ற அறிவிப்பாளர் பற்றி நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்த துறையில் சிறந்த அறிஞரான இமாம் இப்னுல் மதீனீ ,  “இவர் தனியாக அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது “ என்று கூறியிருக்கிறார்கள். (பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 5 பக்கம் :49)
இப்னுல் மதீனியின் கூற்றை வலுப்படுத்தும் விதமாகவே இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்)அவர்களின் கூற்றும் அமைந்துள்ளது. இப்னு ஹஜர் அவர்கள், அறிவிப்பாளர் விமர்சகர்களான அறிஞர்கள் எல்லோருடைய கருத்தையும் எடுத்து வைத்து அலசி முடிவு சொல்பவர்.
இந்த ஆசிம் பின் குலைப் பற்றி இப்னு ஹஜர், “ஸதூக்” என்கிறார்கள். இந்த வார்த்தைக்கு உண்மையானவர் என்று அர்த்தம் இருப்பினும் ஒரு அறிவிப்பாளர் குறித்து இப்னு ஹஜர் இந்த வார்த்தையைச் சொன்னால் அவர் நம்பகமானவர் என்றாலும் மறதி அல்லது  கூட்டி குறைத்து சொல்லும் குறை அவரிடம் இருக்கும் என்பது தான் அதன் கருத்து.
(தக்ரீபுத் தஹ்தீப்  பாகம் :2 பக்கம் : 286 )
இதை மெய்ப்பிக்கும் விதத்தில் அத்தஹிய்யாத் இருப்பு முறை பற்றிய மிகமிக ஆதரப்பூர்வமான நபி மொழிகளெல்லாம் இந்த அசைத்தல் இல்லாமல் இருக்கிறது.
அறிவிப்பாளர் பிரச்சனை: இரண்டு
இந்த அறிவிப்பாளர் தொடர் பிரச்சனையில் இன்னொரு குறையை சில அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது என்னவெனில் ஆஸிம் பின் குலைப் வழியாக இந்த நபி மொழியை அறிவிக்கும் பல அறிவிப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் எவரும் சொல்லாத இந்த அசைப்பு செய்தியை ஸாயிதா என்பவர் மட்டுமே சொல்கிறார்.
ஸாயிதா தரமான அறிவிப்பாளர் தான் என்றாலும் தன்னைப் போன்ற, ஆஸிமின் பல மாணவர்கள் அறிவிக்கும் செய்திக்கு வேறுபட்ட தகவலை சொல்லி இருப்பதால் இந்த செய்தி “ஷாத்“ என்ற பலவீனமான நிலையை அடைகின்றது என்கின்றனர். இதைக் கூறும் சில அறிஞர்களின் கூற்றை கீழே தருகிறேன்.
1) முஸ்னது அஹ்மது ஹதீஸ் எண் : 18890. இது அசைத்ததை பார்த்ததாக கூறும் ஹதீஸ். இதன் கீழ் அல்லாமா ஷுஐப்  அல்அர்னவூத் அவர்கள் குறிப்பிடுவது:
“இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ். ஆனால் அதை அசைக்க நான் பார்த்தேன் என்னும் வாசகம் ஆதாரப் பூர்வமானதல்ல. ஏனெனில் அது ‘ஷாத்’ வகையாகும். இதனை ஸாயிதா மட்டுமே தனியாக கூறியிருக்கிறார்.
2)  இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸ் துறை
பெரிய இமாம்களில் ஒருவரான இமாம் இப்னு குஸைமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் மேற்கண்ட செய்தியை மேலோட்டமாக
கூறியிருக்கிறார்கள்.
ஸஹீஹ்  இப்னு குஸைமா  ஹதீஸ் எண்  714 (சம்பந்தப் பட்ட ஹதீஸ்),  ஹதீஸ் வாசகம் முடிந்ததும் இப்னு குஸைமா எழுதுவது:
அபூபக்கர் (இப்னு குஸைமா(ரஹிமஹுல்லாஹ்) கூறுவது:  ”ஹதீஸ்களில் எதிலும் அதனை அசைப்பார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை. இந்த ஹதீஸை தவிர!  அசைப்பு பற்றி கூறுவது இதில் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.”
3) காலித் பின் அப்தில்லாஹ் என்பவர் ஆஸிம் பின் குலைப்  வாயிலாக
அறிவிக்கும் இதே ஹதீஸை இமாம் பைஹகீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதில் விரலை அசைத்ததாக இல்லை. (பார்க்க: அஸ்ஸுனனுல் குப்ரா, ஹதீஸ் எண்: 2895 பாகம் 2, பக்கம் 131)
இந்த ஹதீசஸுக்குக் கீழ் இமாம் பைஹகீ எழுதுவது:
“இந்த கருத்தில் தான் ஆஸிம் பின் குலைபிடமிருந்து ஒரு கூட்டமே இந்த ஹதீஸை அறிவித்துள்ளது. நாம் இதையே நடைமுறை படுத்துவோம். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளதையும் இப்னு ஸுபைரின் ஹதீஸில்
அறிவிக்கப்பட்டுள்ளதையும் நாம் தேர்ந்தெடுப்போம். இரண்டிலும் விரலை அசைத்ததாக இல்லை. இப்னு ஸுபைரின் ஹதீஸில் விரலை அசைக்கவில்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்களிருவரின் ஹதீஸ் உறுதியாக இருக்கிறது. அறிவிப்பாளர் தொடர் பலமாகவும் இருக்கிறது. மட்டுமின்றி, இந்த அறிவிப்பாளர்கள் ஆஸிம் பின் குலைபை விட தனித்தன்மை உடையவர்களாகவும் கூடுதல் சிறப்புக்குரியவர்களாகவும் உள்ளனர். அல்லாஹ்விடமே நல்லுதவி உள்ளது.”
இவ்வாறு பைஹகீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிஞர்களின் கருத்துப்  படி விரலை அசைப்பது தொடர்பாக ஸாயிதா தவறுதலாக அதிகமாக்கி கூறிவிட்டார். இதை உறுதிப்படுத்த கீழ்வரும் அறிவிப்பாளர்கள் பெயர்களையும் அவர்கள் அறிவித்துள்ள வாசகத்தையும் பார்ப்போம்.
1) ஆஸிம் – ஸாயிதா – விரலை அசைத்தார்கள் – நஸஈ 889
2)ஆஸிம் – சுஃப்யான் – விரலை நட்டு  வைத்தார்கள் – நஸஈ 1159
3)ஆஸிம் – அப்துல் வாஹித் –ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் –அஹ்மத் 18870
4)ஆஸிம் – ஷுஅபா – ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் –அஹ்மத் 18875
5)ஆஸிம் –ஸுஹைர் பின் முஆவியா – ஆட்காட்டி விரலால் சுட்டிக்
காட்டினார்கள் – அஹ்மத் 18896
6) ஆஸிம் –மூசா பின் அபீ ஆயிஷா –ஆட்காட்டி விரலால் சுட்டிக்
காட்டினார்கள் – பஸ்ஸார் 4489
7)ஆஸிம் –மூசா பின் அபீ கஸீர் –ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள் –தப்ரானி 17555
மேற்கண்ட விரல் உயர்த்துதல் பற்றிய ஹதீஸின் அறிவிப்பாளர்களில்
ஆஸிமிடமிருந்து செவியுற்ற ஏழு மாணவர்களில் ஆறுபேர் ஒருவிதமாகவும் ஸாயிதா என்ற மாணவர் மட்டும் வேறு விதமாகவும் அறிவித்திருப்பதை பார்க்கிறோம். (ஆசிமின் இந்த ஆறு மாணவர்கள் மட்டுமின்றி வேறு  மாணவர்களும் ஸாயிதாக்கு மாற்றமாகவே அறிவித்துள்ளனர் என்று அறிஞ்சர்கள் கூறுகின்றனர்.)
இதனால் இமாம் பைஹகீ உள்ளிட்ட பல அறிஞர்கள் ஸாயிதாவின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தத் தகுந்ததல்ல என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இதை நாம் முன்பு பார்த்தோம்.
இங்கு சிலர் ஸாயிதவின் மாறிப்போன அறிவிப்பை சரிகாண்பதற்க்காக தவறான வியாக்கியானம் கொடுக்கிறார்கள். அதற்கு சரியான விளக்கத்தை கீழ்வரும் பகுதியில் பார்ப்போம்.
கருத்து அடிப்படையில் : ஓன்று
நாம் மேலே கண்டவாறு ஆஸிம் பின் குலைபின் ஆறு மாணவர்கள் ஆட்காட்டி விரலால் சுட்டி காட்டியதாகவும் நட்டு வைத்ததாகவும் சொல்ல, ஸாயிதா என்ற மாணவர் மட்டும் விரலை அசைத்ததாக இன்னொரு விதமாக முரணாகச் சொல்கிறார். இது ‘ஷாத்’ என்ற பலவீன நிலையை அடைகிறது. இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு செயல்படுத்தத் தகுந்ததல்ல.
ஆனால் மறுத்து வியாக்கியானம் தருகிறோம் என்ற பெயரில் சிலர் வைக்கும் வாதம்;
“விரலை அசைத்து கொண்டிருப்பது சுட்டி காட்டுவதற்கு முரணல்ல, ஆகவே அசைப்பதாக வரும் அறிவிப்பை சுட்டிக்காட்டியதாக வரும் செய்திக்கு கூடுதல் விளக்கமாக எடுத்து கொள்ள வேண்டும்.”
ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுவது அதை அசைத்து கொண்டிருப்பதற்கு முரணானது. அசைத்து கொண்டிருப்பது சுட்டிக்காட்டுவதாக ஆகாது.
அதனால் தான் அரபு மொழியிலும் ஹதீஸ்களிலும் சிறந்த இமாம் பைஹகீ(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அசைத்தல் ஹதீஸை பதிவு செய்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்கள்:
“இங்கு அசைப்பது என்று சொல்லப்படுவதன் மூலம் நாடப்படுவது
சுட்டிக்காட்டுவதாக இருப்பது தான் சாத்தியம். (அதாவது
சுட்டிக்காட்டுவதற்காக உயர்த்தும் போது ஏற்படும் அசைவு, அதை தொடர்ந்து எதார்த்தமாக ஒன்றிரெண்டு தடவை தானாக அசைவது) தொடர்ச்சியாக அசைத்து கொண்டிருப்பது என்று நாடப்படுவது சாத்தியமல்ல. இப்படி கருத்துக் கொள்ளும் போது இப்னுஸ்ஸூபைரின் அறிவிப்புடன் ஒத்துவரக்கூடியதாக ஆகும்.”
(பார்க்க : அஸ்ஸுனைனுல் குப்ரா (பைஹகீ) ஹதீஸ் எண் : 2899, பாகம் எண்: 2, பக்கம் :132)
இது போல கடந்த நூற்றாண்டின் சிறந்த ஹதீஸ் துறை அறிஞரான அல்லாமா ‘அஹ்மத் பின் முஹம்மத் அஸ்ஸித்தீக் அல்குமாரீ’ இக்கருத்தையே பதிவு செய்துள்ளார்கள். இமாம் பைஹகீயின் மேற்கண்ட கருத்தை எழுதிவிட்டு அவர்கள் கூறுவது “இதற்கு வேறு அர்த்தம் இல்லை. இந்த (அசைத்தல் பற்றிய) வார்த்தை அறிவிப்பாளர்கள் மாற்றியதால் ஏற்பட்டதே தவிர வேறில்லை.”
(பார்க்க: “அல்ஹிதாயா ஃபீதக்ரீஜி அஹாதீஸில் பிதாயா” பாகம் : 3, பக்கம் 137, பதிப்பு : ஆலமுல் குத்துப்)
இக்கருத்தை நிகழ்கால ஹதீஸ் துறை அறிஞர் அல்லாமா ‘ஷுஐப் அல்அர்னஊத்’ அவர்களும் கூறியிருப்பதை முன்பு குறிப்பிட்டுள்ளோம்.
இதில் முக்கியமான இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது, வாயில் பின் ஹூஜ்ர்(ரழியல்லாஹு அன்ஹு)என்ற சஹாபியின் ஹதீஸை பலரும் ஒரே மாதிரியாக அறிவிக்க ஸாயிதா என்பவர் மட்டும் அசைப்பதை சேர்த்து கூட்டி சொல்லியிருக்கும் ஒரு ஹதீஸை பற்றித்தான்.
ஸாயிதாவைத் தவிர்த்த மற்ற அறிவிப்பாளர்களின் வார்த்தையே சரி என்பதை நாம் இந்த ஹதீஸோடு தொடர்பில்லாத வேறு சஹாபாக்கள் கூறியுள்ள வேறு அறிவிப்பாளர்கள் வழியாக கிடைத்துள்ள ஹதீஸ்களைப் பார்த்து முடிவு செய்துவிடலாம்.
சுட்டிக்காட்டியதாக மட்டும் வரும் ஹதீஸ்கள்:
1) இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு), நூல் : முஸ்லிம் 913 மற்றும் முஅத்தா. அஹ்மத், நஸாஈ
2) நுமைர் அல்குஸாஈ(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் : இப்னு  குஸைமா 716
இதுபோல் சுட்டிக்காட்டியதாக, உயர்த்தியதாக, நீட்டி வைத்ததாக பல
ஸஹாபாகளால் அறிவிக்கப்பட்டுள்ள பல ஹதீஸ் நூல்களில் தஷஹ்ஹுத் பற்றிய பாடத்தில் பார்க்கலாம்.
கருத்து அடிப்படையில் : இரண்டு
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் (தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில்) துஆ செய்யும் போது தன் விரலால் சுட்டிகாட்டுவர்கள். அதை அசைக்கமாட்டர்கள். (நூல் : அபூதாவூத் 991 நஸாஈ)
ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் தெளிவாகவே விரலை அசைக்கவில்லை என்று கூறுகிறது.
இதை மறுக்க முனையும் சிலர், “உடன்பாடான செய்திக்கு முன்னுரிமை கொடுத்து எதிர்மறைச் செய்தியை விட வேண்டும்.” என்ற நியதிப்படி செயல்பட வேண்டும் என்கின்றனர்.
அதாவது அசைத்ததாக வருவதை எடுத்துக் கொண்டு அசைக்கவில்லை என்பதை விட வேண்டும் என்கின்றனர். இவர்கள் முக்கியமான ஒன்றை கவனிக்க மறுக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் தனது இந்த ஹதீஸில் பின்வருமாறு கூட சொல்லியிருக்கலாம்.
அத்தஹ்ஹிய்யாத் இருப்பில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் தலையை அசைக்கவில்லை, கண்ணை கசக்கவில்லை, உதட்டை பிதுக்கவில்லை, இடது கை பெருவிரலை உயர்த்தவில்லை.
இப்படி நபி செய்யாத பல செயல்களை இல்லை இல்லை என்று நூற்றுக்கணக்கில் சொல்லியிருக்கலாம்.
அப்படி எதையும் சொல்லாமல் இதை மட்டும் ( ஆட்காட்டி விரல் அசைப்பை மட்டும்) இல்லை என்று சொல்கிறார்கள் என்றால் தகுந்த காரணம் இருக்கிறது என்பதைப் புரிய முடியவில்லையா?
காரணம்:
ஸஹாபாக்கள் காலத்தின் பிற்பகுதியில் சிலர் விரலை அசைக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதை கண்டதனால் தான் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரழியல்லாஹு அன்ஹு)நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் அசைக்கவில்லை என்கிற செய்தியை- அவ்வாறு தான் பார்த்ததின் அடிப்படையில்- சொல்லி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கத்துக்கு மறுப்பை பதிவு செய்கிறார்கள்.
இந்த கருத்தை வலுப்படுத்த நடைமுறையிலுள்ள ஒரு வழக்கத்தை ஆதாரமாக கொள்ளலாம். அரபு நாடுகளுக்குச் சென்றவர்கள் பார்த்திருப்பார்கள். ஜமாஅத்தாக தொழுது கொண்டிருக்கும் போது இமாம் ஓதுகிற வசனத்தில் தவ்ஹீதை (ஏகத்துவத்தை) குறிக்கிற வசனங்கள் வரும்போது தக்பீர் கட்டி நிற்கும் நிலையிலேயே ஆட்காட்டி விரலை உயர்த்தி அதனை சில தடவை அசைப்பார்கள் சிலர்.
ஓரிறை கொள்கையை கூறுகிற வசனங்களை கேட்கும் போதும் ஓதும் போதும் ஆட்காட்டி விரலை உயர்த்த வேண்டும் என்றோ அசைக்க வேண்டும் என்றோ நபிவழியில் இல்லை.
ஆனால் மேற்கண்ட நடைமுறை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது நபியின் காலத்துக்கு பின்பு தோன்றிய புதிய பழக்கம் என்பதை புரிகிறோம். அது போலத்தான் அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைப்பதும் புதிய பழக்கம். அது தோன்றுகிற காலத்திலேயே கண்ட ஸஹாபி அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரழியல்லாஹு அன்ஹு) இப்படி நபி செய்யவில்லை என்ற தகவலை சேர்த்து சொல்கிறார்கள்.
ஆகவே இந்த ஹதீஸின் செய்தியை ஏற்றுக் கொள்வது கடமை! இதனால் தான் இமாம் பைஹகீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அசைத்தல் செய்தி இடம்பெறும் ஹதீஸை பதிவு செய்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்கள்;
“அசைத்தல் என்பதன் மூலம் நாடப்படுவது சுட்டிக்காடுதலாக இருப்பது தான் சாத்தியம். அதை தொடர்ந்து அசைத்து கொண்டிருப்பது என்று நாடப்படுவது சாத்தியமல்ல. இவ்வாறு கருத்து கொள்ளும் போது இப்னுஸ் ஸுபைரின் அறிவிப்புக்கு (அபூதாவூத் 991 க்கு)  ஓன்று பட்டதாக இந்த நபிமொழி ஆகிவிடும்” அல்லாஹ் நன்கறிந்தவன்!”
– அஸ்ஸுனைனுல் குப்ரா 2899 / பாகம் : 2 பக்கம் :132
மட்டுமின்றி, இப்னுஸ் ஸுபைர்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள். ஆஸிம் பின் குலைபை விட தனித்தன்மை உடையவர்களாகவும் கூடுதல் சிறப்புக்குரியவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அஸ்ஸுனைனுல் குப்ரா ஹதீஸ் எண் 2895 ன் கீழ் அவர்கள் எழுதி உள்ள இச்செய்தியை மேலே நாம் எடுத்தெழுதியுள்ளோம்.
கருத்து அடிப்படையில்: மூன்று!
அத்தஹிய்யாத் இருப்பில் வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்துவது பரவலாக நபிதோழர்களிடத்தில், தவ்ஹீத் (ஓரிறைக்) கொள்கையை சுட்டிக்காட்டுவதாகவே கருதப்பட்டு வந்தது. ஓரிறைக் கொள்கையை உணர்த்தும் விதத்தில் சுட்டிகாட்டுவதாயிருக்கும் போது நீட்டி வைத்திருப்பது தான் சரியான முறையும் ஒழுங்கும் ஆகும்.
இக்கருத்தை கூறும் ஹதீஸ்கள் சிலவற்றை பார்ப்போம்:
பிரபல தாயிஈ இப்னு ஸீரீன்(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு மனிதர் அத்தஹிய்யாத் இருப்பில் இருவிரலை (அதாவது இரு கைகளின் ஆட்காட்டி விரலையும்) நீட்டி துஆ செய்து கொண்டிருப்பதை சஹாபாக்கள் பார்த்தால் அவற்றில் ஒன்றை அடித்து விட்டு அவன் ஒரே இறைவன் தான் என்று கூறுவார்கள்.” நூல் : இப்னு அபீஷையா 8522
குஃபாஃப் பின் ஈமாஉ(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் தொழுகையில் தஷஹ்ஹுத் ஓதுவதற்கு அமர்ந்தால் தனது விரலால் சுட்டிகாட்டுவார்கள். இதை கண்ட இணைவைப்பாளர்கள் நமக்கு இவர் சூனியம் செய்கிறார் என்பார்கள்.  ஆனால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் தவ்ஹீதைத்தான் நாடுவார்கள்.” நூல் : அஸ்ஸுனைனுல் குப்ரா, பைஹகீ 2904 பாகம் : 2  பக்கம்:132
(இந்த ஹதீஸை குஃபாஃப்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களிடம் செவியுற்ற தாபிஈ இன்னார் என்ற பெயருடன் குறிப்பிடப்படாமல் மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதர் என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு குறை.  ஆயினும் ஓரிறை கொள்கையை உணர்த்தும் விதத்தில் ஆட்காட்டி விரலை உயர்த்துவது அமைந்துள்ளது என்பது ஹதீஸ்களில் காணப்படும் தகவல் என்பதற்கு ஆதாரமாக இச்செய்தியை எடுத்துக்கொள்ளலாம்.)
பிரபல தாபிஈ இப்ராஹீம் கூறுகிறார்: “தொழுகையில் ஒருவர் தன் ஒரு விரலால் சுட்டிக் காட்டினால் அது அழகிய செயல் அது தான் தவ்ஹீத் இரு விரல்களால் சுட்டிக் காட்டக்கூடாது. அது வெறுக்கத்தக்கது.”
நூல் : முஸன்னஃப் இப்னு அபீஷையா 8523.
கருத்து அடிப்படையில்: நான்கு
அத்தஹிய்யாத்தில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தியை அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அவர்களின் இளைய சகோதரரும் பிரபல ஹதீஸ் அறிவிப்பாளரும் அன்னை ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின்
மாணவருமான உர்வா பின் ஸுபைர் பற்றிய செய்தி:
ஹிஷாம் பின் உர்வா, “தன்  தந்தை உர்வாபின் ஸுபைர் தொழுகையில் தனது விரலால் சுட்டிக் காட்டுவார்கள். அதை அசைக்க மாட்டார்கள்” என்று அறிவிக்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் விரலை அசைக்கமாட்டர்கள் என்று அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு)அறிவிக்கிறார்கள். இது ஒரு செய்தி. இவரின் இளைய சகோதரர் உர்வா பின் ஸுபைர் விரலை அசைப்பதில்லை. இது இன்னொரு செய்தி. இந்த இரண்டாவது செய்தி நபி விரலை அசைக்க மாட்டார்கள் என்ற முந்தய செய்தியை வலுப்படுத்துகிறது. தம்பி உர்வா அண்ணன் அப்துல்லாஹ்வின் மாணவர் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இந்த விசயம் தெளிவாகப் புரியும். அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்களின் ஹதீஸை பலவீனப் படுத்த முனைவதும் தவறு எனபதும் புரியும்.
இது வரை எழுதியிருப்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு ஹதீஸ்;
ஒரு மனிதர் தொழுகையில் (இருப்பில்) பொடிக்கல்லை புரட்டிக் கொண்டிருந்தார். அவர் தொழுது முடித்ததும் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அம்மனிதரை அழைத்து நீ இப்படி செய்யாதே இது ஷைத்தானின் செயல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் செய்தது போல் செய் என்றார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எப்படி செய்வார்கள் என்று கேட்டார். அப்போது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள், தனது வலது தொடை மீது தனது வலது கையை வைத்து பெறு விரலுக்கு அடுத்த விரலால் கிப்லா திசையில் சுட்டிக்காட்டினார்கள். அதன் பக்கம் தன் பார்வையை செலுத்தினார்கள். பிறகு “இவ்வாறுதான் ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் செய்வதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள். (நூல்; நஸாஈ 1160, இப்னு ஹிப்பான் 1947)
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  எப்படி செய்வார்கள் என்று கேட்ட மனிதருக்கு விளக்கமளித்த இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)அசைத்துக் காட்டவில்லை அசைத்ததாக சொல்லவும் இல்லை. அது நடைமுறையாக இருந்திருந்தால் இந்த இடத்தில் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.
அல்லாஹ் நன்கறிந்தவன்!
ஆக்கம்:மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பாஈ