Tuesday, October 13, 2020

இஸ்லாமிய கொள்கை விளக்கம்

 





x

இஸ்லாமிய கொள்கை விளக்கம்

அறிமுகம்:


இஸ்லாம் தெட்டத் தெளிவான கொள்கையின் மீது நிறுவப் பட்ட இறை மார்க்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தான் பின்பற்றுகின்ற இஸ்லாத்தின் கொள்கை பற்றிய தெளிவான அறிவை பெற்றிருப்பது கடமையாகும். இஸ்லாத்தின் கொள்கை பற்றிய அறிவின்றி புரியப்படும் எந்தவொரு வணக்க வழிபாடும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. இஸ்லாமிய கொள்கை பற்றிய போதிய அறிவின்மை காரணமாகவே முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தின் தூய கொள்கைக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.


பல்வேறு துறைகளுக்கும் சமூகத்தில் வழங்கப்படும் முக்கியத்துவம் இஸ்லாமிய கொள்கை என்ற அதிமுக்கியத்துவமிக்க துறைக்கு வழங்கப்படாமைக்கு காரணம், இஸ்லாத்தின் கொள்கை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவான பார்வை இல்லாமற் போனதே ஆகும்.


இஸ்லாத்தின் பிரதான மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும். இஸ்லாமிய கொள்கை பற்றி மிக அதிகமாகவும் அழுத்தமாகவும் பேசும் போது, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது 23 வருட தஃவா வாழ்வில் மிக அதிக காலம் இஸ்லாமிய கொள்கை பற்றிய பிரசாரத்தையே முன்னெடுத்திருக்கும் போது, சமூகத்தில் அதிகமாக பேசப்படாத அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாத அல்லது அலட்சியம் செய்யப்படுகின்ற ஒரு துறையாக இஸ்லாமிய கொள்கை எனும் துறை மாறியிருப்பது நிச்சயமாக ஆபத்தான ஒரு அறிகுறியாகும்.


வரலாறு நெடுகிலும் தோன்றிய பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இஸ்லாமிய கொள்கை பற்றிய பல நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறார்கள்.


அகீதா என்றால் என்ன?


அகராதி பொருள்: உறுதிப்படுத்துவது, பலப்படுத்துவது


இஸ்லாமிய வழக்கில்: எந்த விஷயங்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உண்மைப்படுத்த வேண்டுமோ அதற்கே அகீதா என சொல்லப்படும். மேலும் அவை ஆய்விற்கு அப்பாற்பட்ட மறைவான ஞானத்தோடு தொடர்புடைய விஷயங்களாகவும் இருக்கும்.


அதில் ஈமான் சார்ந்த ஆறு விஷயங்கள் மட்டுமே அடங்கும்


1 - அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுதல்

2 - மலக்குகள் மீது ஈமான் கொள்ளுதல்

3 - வேதங்கள் மீது ஈமான் கொள்ளுதல்

4 - தூதர்கள் மீது ஈமான் கொள்ளுதல்

5 - மறுமை நாள் மீது ஈமான் கொள்ளுதல்

6 - விதியின் மீது ஈமான் கொள்ளுதல்


ஆதார குறிப்புகள்:


அல்-குர் ஆன் 4:136

அல்-குர் ஆன் 54:49


கலிமாவின் முக்கியத்துவம்:


அன்றையை அரபுகளின் வாழ்க்கையை வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு வரணிக்கின்றனர்.


ஒற்மைக்கு ஊறாய், உறவுக்கு கேடாய், பண்புக்கு மாறாய், பகுத்தறிவுக்கு முரணாய், வளமான வளர்ச்சிக்கு தடையாய் மதுவிலும் மாதுவிலும் மூழ்கிக்கிடந்தார்கள்.


இப்படிப்பட்ட சமூகத்தை நபியவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமத்துத் தவ்ஹீதின் மூலம் சிறந்த சமூகமாக உயர்ந்த சமூகமாக மாற்றியமைத்தார்கள் . ஸஹாபாக்களுக்கு எந்த தவ்ஹீத் பாதுகாப்பையும் , நிம்மதியையும், இம்மை மறுமை வெற்றியையும் வழங்கியதோ அந்த தவ்ஹீதால் மட்டுமே இவை அனைத்தையும் நாமும் அடைய முடியும்.


சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் லா இலாஹ இல்லல்லாஹ் வின் பக்கம் மக்களை அழைப்பதிலேயே தீர்வு இருக்கிறது. நபிமார்கள் சீர்திருத்த பணியை எதிலிருந்து தொடங்கினார்களோ அதிலிருந்து நாமும் தொடங்க வேண்டும் .


ஒரு சாரார் அரசியலில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர் ,இன்னும் சிலர் கல்வியில் முன்னேறுவதில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர் , இன்னும் சிலர் ஆர்பாட்டங்கள் போராட்டங்களில் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர். இன்னும் சிலர் சமூகப்பணியில் ஈடுபடுவதின் மூலம் தீர்வு இருப்பதாக கருதுகின்றனர்.


இஸ்லாமிய சமூகத்தின் அங்கத்தினராக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏகத்துவ கலிமா வை பிரசாரம் செய்வதில் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பதை அறியாமல் உள்ளனர் அல்லது அதில் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர் காரணம் நமது உள்ளங்களில் கலிமத்துத் தவ்ஹீத் உள்வாங்கப்படவில்லை . فاقد الشيء لا يعطيه – ஒன்றை பெறாதவன் அதனை பிறருக்கு கொடுக்க முடியாது .


இறைத்தூதர்களின் பாதையில் பயணிப்போம்


21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.


16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம் …



7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.



71:5. பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.



71:8. “பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.



71:9. “அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.



7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை – நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.



7:73. “ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை



29:16. இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).



11:84. மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை



5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம்

நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.



5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.



6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்



47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக 


இவ்வாறு அனைத்து நபிமார்களும் மக்களை அல்லாஹ்வை வணங்குவதின் பக்கம்தான் அழைத்தார்கள் . இந்த மகத்தான பணியை நிறைவேற்றுவதில்தான் முஸ்லீம்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:


நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர்களுக்கு அழைப்புவிடுங்கள் …

நூல்:முஸ்லிம் 7372



நானும் இதற்கு முன்னால் அனுப்பபட்ட நபிமார்களும் சொன்ன வார்த்தைகளிலேயே மிகச் சிறந்தது லா இலாஹ இல்லல்லாஹ் நூல்: முஅத்தா 726 , பைஹக்கி 8391


முஸ்லீம்களில் யார் தான் லா இலாஹ இல்லல்லாஹ்வை மறுத்தார்கள்? அனைவரும் ஏற்றுதானே உள்ளனர். என நம்மிலே பலர் கருதலாம். ஆனால் முஸ்லீம்களில் அதிகமானவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளையும், அதன் நிபந்தனைகளையும் , அதனை முறிக்கும் காரியங்களையும் அறியாதவார்களாக உள்ளனர். இந்த வார்த்தை வெறும் மந்திரச் சொல்லாகவே பார்க்கப்படுகிறது.


லா இலாஹ இல்லல்லாஹ்வில் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.


லா இலாஹ – மறுத்தல், நிராகரித்தல் அதாவது இந்த உலகில் மாற்று மதத்தவர்களால் வணங்கப்படக் கூடிய அனைத்து போலி தெய்வங்களையும் ஒரு முஸ்லிம் மறுக்க வேண்டும் நிராகரிக்க வேண்டும்.



2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.



மேலே உள்ள வசனத்தில் தாகூத்தை நிராகரிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான் . அல்லாஹ் அல்லாமல் இவ்வுலகில் வணங்கப்படும் அனைத்தும் தாகூத்தே.


இல்லல்லாஹ் – உறுதி படுத்துதல் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்க்கு தகுதியானவன் என்று உறுதிபடுத்த வேண்டும் .


லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று பொருள் கொள்வது தவறானது பிழையானது.  வணங்குவதற்க்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதே சரியான பொருள். 


இதுவே மார்க்கத்தின் அடிப்படை, இந்தக் கலிமாவை பிரசாரம் செய்யவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் , இதனை அளவுகோலாகக் கொண்டே ஒருவனது அமல்கள் அங்கீகரிக்கப்படுமா? நிராகரிக்கபடுமா என்பதையும், ஒருவனது சுவன வாழ்வும் நரக வாழ்வும் தீர்மானிக்கப்படும். எனவே முஸ்லீம்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வை கற்றுக் கொள்பவர்களாகவும் இதன் பக்கம் மக்களை அழைப்பாவார்களாகவும் இதில் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும் மாறவேண்டும்.


கலிமாவின் நிபந்தனைகள்


இத் திருகலிமாவிற்கு மார்க்க அறிஞர்கள் ஏழு முதன்மையான நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள். அவற்றை அறிந்து பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.


உதாரணமாக தொழுகைக்கு நிபந்தனைகள் பல இருப்பதைப் போன்றதாகும். இங்கே குறிப்பிடப்படுகின்ற நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது தான் “லாயிலாஹ இல்லல்லாஹ்வை” மொழிந்தவனுக்கு பயனளிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.


முதன்மையான ஏழு நிபந்தனைகள்: –



1) அறிவு - (الْعِلْمُ) - பொருளை அறிவது


அதாவது, ‘வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே’ என்றும் ‘அவனல்லாதவைகளை வணங்குவது தவறானது, அவைகளால் யாருக்கும் உதவி, தீமை செய்ய முடியாது’ என்பதை எவ்வித மறுப்புமின்றி அறிந்துக் கொள்வதாகும்.


“ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக” (அல்-குர்ஆன் 47:19)


இந்த வசனத்தின் மூலம் ‘அறிவைத் தொடர்ந்து தான் அமல்கள் இடம் பெற வேண்டும்’  என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 


“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை அறிந்த நிலையில் எவர் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸ் மூலமாக அறிவார்ந்த செயல்பாடு தான் ஒருவனை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அறிவை அடிப்படையாக வைத்து செயலாற்ற வேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் நமக்கெதிராக அமல்கள் கொண்டு வரப்படும்.


இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –


‘வணக்கத்திற்குரியவன் உண்மையாகவே அல்லாஹ் தான் என்பதை அறியாமலிருத்தல், அல்லாஹ் அல்லாதவைகளையும் வணங்கலாம்; அவைகள் இணைவைப்பை ஏற்படுத்தாது’ என்று நினைத்தல், அல்லது, இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், வாஜிபுகள், இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்களை அறியாமலிருத்தல்  போன்றனவாகும். 



2) மன உறுதி - اليَقِينُ

அதாவது, 'எவ்விதமான சந்தேகமுமின்றி உறுதியுடன் நம்ப வேண்டும்'.  இவ்வடிப்படையில் கடுகளவேனும் சந்தேகப்படக் கூடாது.


"(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாதிருந்தவர்கள்” (அல்-குர்ஆன் 49:15)


இவ்வசனத்தில் அவர்களுடைய மன உறுதியானது, அவர்களின் உண்மைத் தன்மையைப் பறை சாற்றுகின்றது. இதில் சந்தேகம் கொள்வது நயவஞ்சகமாகும்.


"உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வென்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன். எந்தவொரு அடியான், இவ்விரு விடயங்களிலும்  சந்தேகமற்றவனாக அல்லாஹ்வைச் சந்திக்கின்றானோ அவன் சுவர்க்கம் நுழைவான்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இந்த ஹதீஸில் ஒருவன், சுவனம் நுழைவதற்கு, ஷஹாதா கலிமாவைப் பொறுத்தவரை மன உறுதி எனும் நிபந்தனை மிகவும் கண்டிப்பான ஒரு விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த அடிப்படையில் சந்தேகம் கொள்வது நிராகரிப்பாகும்.


சந்தேகம் உள்ளவர்கள்தான் தெய்வீக தன்மை மற்றவர்களுக்கும் உள்ளது என்று நம்புவார்கள், ஜோசிய காரனிடம் செல்வார்கள் கடைசியில் தஜ்ஜாலிடம் மாட்டி கொள்வார்கள்


 இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: 


மேலே குறிப்பிட்ட விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டால் 

அல்லது ‘அல்லாஹ் அல்லாதவைகளும் வணங்கப்படத் தகுதியானவைகள் தான்' என்றோ அல்லது

‘அச்செயல்   இணைவைப்பாகாது' என்றோ கருதினால் இந்த நிலை அவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும்.


3) ஏற்றுக் கொள்ளல் - القُبُولُ


அதாவது இந்த சாட்சியத்தை ‘மறுப்பின்றி’  ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றில் எதுவொன்றையும் நிராகரிப்பதோ மறுப்பதோ கூடாது. சங்கடம், தடுமாற்றம் இல்லாமல் ஏற்று கொள்ள வேண்டும்


“அல்லாஹ்வையும், எங்கள் பால் இறக்கப்பட்ட (இவ் வேதத்)தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் என (விசுவாசங்கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்”  (அல்-குர்ஆன் 2:136)


“மேலும் ‘அல்லாஹ்வைத் தவிர (உண்மையாகவே) வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமையடிப்பவர்களாக  இருந்தனர். நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்திற்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விடுகின்றவர்களாக?என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்”  (அல்-குர்ஆன் 31:35-36)


இந்த வசனம், ‘பெருமையின் காரணமாக ஏக தெய்வக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆற்பட்டார்கள்.’ எனவே ஏற்றுக் கொள்ளுதல் என்பது இங்கு ஒரு  முக்கிய நிபந்தனையாக இடம் பெறுகிறது.


இத்திருக்கலிமா பொதிந்துள்ள விஷயங்களில் ஒன்றை ‘அது மார்க்கத்திலிலுள்ள விஷயம்’ என்பது தெரிந்திருந்தும் அதனை அவன் நிராகரித்தால் அவன் இஸ்லாத்தை விட்டும்  வெளியேறிவிடுகிறான்.  


உதாரணமாக திருட்டு அல்லது விபச்சாரத்திற்குரிய தண்டனை பலதாரமணம் அல்லது வாரிசுரிமைச் சட்டம் போன்றவைகளில் சிலவற்றை ஆட்சேபிக்கின்றவர்கள் அல்லது மறுப்பவர்கள் இக்கலிமாவை நிராகரிப்பவர்களில், ஏற்றுக் கொள்ளாதவர்களில் சேர்ந்து விடுகிறார்கள். 


அல்லாஹ் கூறுகிறான் : 


அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு எந்த ஒரு முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (33:36)


4) கட்டுப்படுதல் (கீழ்படுதல்) - الإِنْقِيَادُ


அதாவது, அல்லாஹ்வைத் தனது வணக்கத்திற்குரிய நாயனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை அவனது நபியாகவும் தூதராகவும் ஏற்று இக்கலிமாவின் கடமைக்குக் கட்டுப்படவேண்டும். உதாரணம் இப்ராஹீம் (அலை).


“இன்னும் உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள். அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்படிந்தும் விடுங்கள்” (அல்-குர்ஆன் 39:54)


செயல்களற்ற நம்பிக்கை மட்டும் எந்த பிரயோசனமும் அளிக்காது.


உதாரணமாக:-


அபூதாலிப் அண்ணலார் நபி என்பதில் உறுதியாக இருந்தார். அவரை உண்மைப் படுத்தவும் செய்தார். அதுமட்டுமல்ல அண்ணலாருக்கு உதவி ஒத்தாசையாகவும் இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கீழ்படியாத போது அல்லாஹ்வின் நேசத்தைப் பெறாமல்  இணைவைப்பாளர்களில் ஒருவரானார் என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகின்றது.


'எவர் – அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ, அவர் நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டார்' (அல்-குர்ஆன் 31:22)


மேற்கண்ட வசனத்தின் விளக்கம் : –


'எவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில்' என்றால் அண்ணலாரின் வழிமுறையைப் பின்பற்றி வாழுதல் என்பதாகும்.


'அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ' என்பது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, அவனுக்குக் கீழ்படிந்து, எல்லா அமல்களிலும் மனத்தூய்மையைக் கைப்பிடித்து  இணைவைக்காமலும் இருப்பதாகும்.


'நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்' என்றால், ஏகத்துவக் கலிமாவான கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தண்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார் என்பதாகும்.


இந்த வசனத்தில் 'அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ' என்ற பகுதி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்குக் கீழ்படிதலைக் குறித்து நிற்கின்றது.


இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –


அ) எதாவது ஒரு கடமையை முழுமையாக விடுதல்

ஆ) ஏகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒன்றை விடுதல் அல்லது

இ) ஏகத்துவக் கொள்கையை நிலை நிறுத்தும் விஷயங்களில் ஒன்றை விடுதல் மூலம் ஒருவனை நிராகரிப்பாளனாக்கும் செயல்களைச் செய்தல்.

ஈ)முஸ்லிம்களை நேசிக்காமலிருத்தலும், இணைவைப்பாளர்களை விட்டும் ஒதுங்கியிருக்காமலித்தலும் இதில் அடங்கும்.


5. உண்மை - الصِّدْقُ


அல்லாஹ்விடம் உண்மையாக நடந்து கொள்ளுதல். இது அவனுடைய நம்பிக்கையில், அடிப்படைக் கொள்கையில் உண்மையாளனாக இருப்பதைக் குறிக்கும். ஒருவன் இக்கலிமாவை நாவினால் சொல்லிக் கொண்டு அதன் அர்த்தத்தை உள்ளத்தால் மறுத்தால் நிச்சயமாக அவன் நயவஞ்சகர்களின் கூட்டத்தில் சேர்த்து விடுவான். சோதனையிலும்  தடுமாற்றம் இல்லாமல் உண்மை என்று நம்ப வேண்டும்.


'விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்ளுங்கள்! (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்' (அல்-குர்ஆன் 9:119)


இந்த வசனம் உண்மை எனும் நிபந்தனையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்த நிபந்தனை நீங்கும் போது அவ்விடத்தை பொய்யும் நயவஞ்சகமும் இடம் பிடிப்பதை நாம் அறிந்துக் கொள்ள முடியும். அதே போன்று இந்த நிபந்தனை நீங்கும் போது அதற்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கமும் கைநழுவிப் போய்விடும்.


'எவர் (உண்மையாகவே) வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதத் என்றும் சாட்சி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகிறான்'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.


6) மனத்தூய்மை - الإِخْلَاصُ


அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே எனும் மனத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும். எந்த வகையான உலக இலாபங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடாது.


'தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே  உரித்தானது என்பதை அறிந்துக் கொள்வீராக' (அல்-குர்ஆன் 39:3)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –


தனது உள்ளத்திலிருந்து மனத்தூய்மையோடு எவன்  'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுகிறானோ அவன் தான் (மறுமையில்) எனது பரிந்துரைக்கு மிகவும் தகுதியானவன்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.


இந்த ஹதீயில் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை ஷஹாதா கலிமாவில் பிரதானமாகும் என்பது புலனாகின்றது. அத்துடன் மனத்தூய்மை அற்றுப் போகின்றபோது அண்ணலாரின் பரிந்துரை இல்லாமல் போவதை உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.


இதே போன்று இன்னும் எத்தனையோ ஹதீஸ்களில் எவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகின்றாரோ அவர் மீது நரகம் ஹராமாகின்றது போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இது வாஜிபான ஏகத்துவக் கொள்கை பூரணமாகின்ற போது தான் சாத்தியமாகும் என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்காக செய்திருந்தால் நஷ்டம் வரும் போது விரக்தி அடையமாட்டான்


இந்தக் கொள்கை நிறைவேற சில நிபந்தனைகள் அவசியம்: –


``– வாஜிபான கடமைகளை நிறைவேற்றுதல்

– இரண்டு வகையான (சிறிய, பெரிய) இணைவைப்புகளிலிருந்து நீங்கியிருத்தல்

– பெரும்பாவங்களை விட்டும் நீங்கியிருத்தல்


மனத்தூய்மைக்கு எதிரானது இணைவைப்பு, முகஸ்துதி போன்றவைகளாகும். ஒரு முஸ்லிம் மனத்தூய்மையற்றவனாக தனது அமல்களைச் செய்கின்ற போது அந்த அமல்கள் அனைத்தும் பயனற்றுப் போவது மட்டுமல்லாமல் தண்டைனையையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.


“மேலும் (இம்மையில்) அவர்கள் செயலால் செய்து கொண்டிருந்தவற்றின் பால் நாம் முன்னோக்கி, பின்னர்  (அவர்கள் உலகில் விசுவாசம் கொள்ளாததால்) பரத்தப்பட்ட புழுதியாக (பயனற்றதாக) அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்” (அல்-குர்ஆன் 25:23)


7) நேசம் - المَحَبَّةُ


அதாவது இத்திருக்கலிமா மூலம் ஏற்படக் கூடிய கொள்கை கோட்பாடுகளை நேசித்தல், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அதே போன்று அவனுக்கு வழிபட்டு நடக்கும் நல்லடியார்களையும் அத்து மீறாமல்) நேசித்தலாகும். இறுதியாக அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பதாகும்.


இது அல்லாஹ்வின் மீது அன்புக் கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய தண்டனையைப் பயந்து அவனது நற்கூலிக்கு ஆதரவு வைத்தாகவும் வேண்டும். ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாகப் பின்பற்றுவது தான்.


“(நபியே) நீர் கூறுவீராக, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்” (அல்-குர்ஆன் 3:31)


“மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்… அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறவே மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:165-167)


உண்மையான நேசத்தில் அல்லாஹ்வுக்கு அவனது படைப்பினங்களை நிகராக்குவது ஒருவனை இஸ்லாத்திலிருந்து  வெளியேற்றி அவனை நிரந்தர நரகவாதியாக மாற்றும் என்பது தெளிவாகின்றது.


எனவே இங்கு குறிப்பிடப்படும் நேசம் என்பது ஒரு மிகப் பெரிய வணக்கமாகும். அல்லாஹ்வோடுள்ள நேசமானது அதில் எவ்வித கலங்கமும் அற்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான விசுவாசியாக அது அவனை மாற்றும்.எனவே தான் இது ஷஹாதா கலிமாவின் நிபந்தனைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.


7a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சங்கள்: –


அ) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்

ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கிய விஷயங்களை நேசித்தல்

இ) முஃமின்களை நேசித்தலும் 

ஈ) இணைவைத்தலையும் இணைவைப்பாளர்களையும் வெறுத்தல்



கலிமாவின் அடுத்த பகுதி முஹம்மதுர் ரசூலுல்லாஹ்:


முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வின் பொருள்:


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்கள் என ஈமான் கொள்ள வேண்டும். அவர்கள் எவற்றை கூறினார்களோ  அவற்றை உண்மை படுத்த வேண்டும். அவர்கள் ஏவியவைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை விட்டு விலகி நடக்க வேண்டும். அவர்கள் காட்டிய பிரகாரம் அல்லாஹ்வை வழிபட வேண்டும். மேலும் அவர்கள் இறுதித்தூதர் எனவும் அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி மனித, ஜின் இனங்களுக்கு பொதுவானவை எனவும் நம்பிக்கை கொள்ள வேண்டும். மேலும் அவர்களை நேசித்து மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவல் விலக்கல்களை மகத்துவ படுத்துவதும் அதாவது அவற்றை நடைமுறைப்படுத்துவது அவர்களின் மார்க்கத்தை பற்றி பிடிப்பதும் கடமையாகும்.


ஏன் என்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் உண்மையான பொருளை வாய்மையுடன் எடுத்துரைத்தவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான். இது எந்த இறைவன் நபி ஸல் அவர்களை எல்லா மக்களுக்கும் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி சொல்பவராக நரகத்தை விட்டு எச்சரிக்கை செய்பவராகவும் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவன் பக்கம் அழைக்க கூடியவராகவும் பிரகாசிக்கக் கூடிய ஒளிவிளக்காக அனுப்பி வைத்தானோ, அந்த இறைவனின் கட்டளைகளை ஏற்று நடப்பதாக அமைகின்றது. 


நபி ஸல் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்:


1.) நபி ஸல் அவர்களை உண்மை படுத்துவது:


இறைவன் கூறுகின்றான் 


 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ‏

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

 (அல்குர்ஆன் : 53:3 )


2.) அவர்களை பின்பற்றுவது:


இறைவன் கூறுகின்றான்


 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏


(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

 (அல்குர்ஆன் : 3:31 )


 لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

 (அல்குர்ஆன் : 33:21 )


قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏


(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”

 (அல்குர்ஆன் : 7:158 )


3.) அவர்களை நேசித்தல்:


 قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ


(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் : 9:24 )


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தனது தந்தை தனது பிள்ளைகள் இன்னும் பிற மக்கள் யாவரையும் விடவும் ஒருவருக்கு நான் மிக பிரியமாணவராக ஆகாதவரை உங்களில் யாரும் பரிபூரண ஈமான் கொண்டவராக ஆக முடியாது. 

அறிவிப்பாளர் அனஸ் ரலி 

ஆதாரம் புகாரி 15 முஸ்லிம் 44.



4.) நபி (ஸல்) காட்டிய வழியில் அல்லாஹ்வை வழிபடுதல்:


இறைவன் கூறுகின்றான்


 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ‏


அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. (அல்குர்ஆன் : 53:3 )


 مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰى فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ؕ‏


எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 4:80 )


5.) நபியை துன்புறுத்தாதிருத்தல்:


இறைவன் கூறுகின்றான்


 وَمِنْهُمُ الَّذِيْنَ يُؤْذُوْنَ النَّبِىَّ وَيَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ‌ ؕ قُلْ اُذُنُ خَيْرٍ لَّـكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ وَرَحْمَةٌ لِّـلَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ‌ ؕ وَالَّذِيْنَ يُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏


(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

 (அல்குர்ஆன் : 9:61 )



இங்கு துன்புறுத்தல் என்ற சொல் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த மார்க்கத்தையும் அவர்களுடைய வழிமுறையையும் அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் உங்களுக்கெல்லாம் தாயாக விளங்கக்கூடிய அவர்களின் மனைவிமார்களையும் அவர்களின் தோழர்களையும் துன்புறுத்துவதை உள்ளடக்கி இருக்கின்றது.


6.) நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுதல்:


 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏


இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

 (அல்குர்ஆன் : 33:56 )


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் என் மீது ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை சலவாத்து கூறுகிறான் ஆதாரம் முஸ்லிம் 384 


அல்லாஹ் ஸலவாத் கூறுவதன் கருத்து அவன் அருள் புரிவது.


ஸலவாத் கூறும் முறை இந்த ஹதீஸை அறிவிக்கிறார்கள் நூல் புகாரி 6357 முஸ்லிம் 406


அகீதா என்பது ஒரு அமல்


அகீதா (கொள்கை) என்பது முழுக்க முழுக்க ஒருவரின் மார்க்கம் சம்பந்தமான நம்பிக்கை. நம் இஸ்லாமிய மார்க்கத்தில் மறைவான விஷயங்களை பற்றிய நம்பிக்கை. எந்த மனிதனாக இருந்தாலும், எந்த மார்க்கமாக இருந்தாலும், மார்க்கமே இல்லை என்று நிராகரிக்கின்ற நாத்திகனாக இருந்தாலும், அவனுடைய மனதில் சில நம்பிக்கைகள் இருக்கின்றன, நாம் நம்ப வேண்டிய மறைவான விஷயங்களை உண்டு என்று நம்புகின்றோம் நாத்திகர்கள்  இல்லை என்று நம்புகிறார்கள்.


நம் இஸ்லாமிய மார்க்கத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்து ஆறு அம்சங்களும் கண்ணால் காண முடியாத வகைகளாகும். எனது புத்திக்கு எட்டவில்லை, என்னால் உணர முடியவில்லையே, எனது ஆராய்ச்சியில் தென்படவில்லை என்றெல்லாம் மறு கேள்வி கேட்கக் கூடாது. நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் நம்பச் சொல்கிறார்கள் என்பது உறுதியான செய்தியாக கிடைத்தால் அப்படியே நாம் நம்பியாக வேண்டும்.



சில நேரங்களில் கண்ணால் பார்ப்பதும் பொய் ஆகி விடுகின்றது, ஏமாந்து போகின்றோம். மறைவான விஷயங்களை அல்லாஹ்விடமிருந்து சொல்லப்பட்டவை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அணு அளவும் பொய் சொல்லாதவர்கள். நம்மை ஏமாற்றாதவர்கள். அவர்கள் சொல்லி இருப்பவை கண்ணெதிரில் தெரியாவிட்டாலும் கண்கூடாக பார்ப்பவரை நம்புவதே காட்டிலும் மிகப் பலமாக அவற்றை நம்ப வேண்டும் அதற்குப் பெயர்தான் இஸ்லாமியக் கொள்கை.


இஸ்லாமியக் கொள்கை என்பது வெறும் விளையாட்டுக்கோ,  பேச்சுக்கோ நம்புவது அல்ல. உள்ளம் அந்த நம்பிக்கையை உண்மையிலேயே ஏற்று அங்கீகரிக்க வேண்டும். நம்பிக்கை என்பது உள்ளம் செய்கின்ற இபாதத். அதனால் தான் அதற்கு நன்மை உள்ளது.


இஸ்லாமிய கொள்கையை எங்கிருந்து எடுப்பது ?


மார்க்க ஆதாரங்களை கொண்டு நிறுவப்படுவது தான் அகீதா. ஆதாரங்களில் உட்படாத எதையும் அகீதாவில் எடுக்க முடியாது. அதில் 

சுய விளக்கங்கள், ஆய்வுகள் இவற்றுக்கு கொஞ்சமும் இடமில்லை. இதைத்தான் கொள்கையை "அகீதா தௌபீக்கிய" எனப்படும்.  தௌபீக்கிய என்றால் வரையறுக்கப்பட்டது, ஆதாரங்களால் மட்டுமே நிறுவ முடிந்தது என பொருள்படும். 


எனவே அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனுடைய நபியின் விளக்கம் ஆகியவற்றிலேயே தவிர எதிலிருந்தும் அகீதாவை பெறக்கூடாது. வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இவை இரண்டும்தான். அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய மட்டும் இருக்கக் கூடாத பண்புகள் பற்றி அல்லாஹ்வை விட அதிகம் தெரிந்தவர் இருக்க முடியாது. அதற்கு பின் அவனுடைய தூதரை விட அதிகம் தெரிந்தவர் இருக்க முடியாது. ஆகவே தான் நபித் தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் மட்டுமே அகீதாவை கறறார்கள். 


அல்லாஹ்வுடைய பண்புகளில் குர்ஆனும் சுன்னாவும் எதைக் கூறியனவோ அதை மட்டுமே நம்பிக்கை கொண்டார்கள். அதன்படி மட்டுமே செயல்பட்டார்கள். இந்த ஆதாரங்களில் உறுதி செய்யப்படாத அனைத்தையும் மறுத்தார்கள். இதனால்தான் அவர்கள் இடையே எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே அகீதாவில் ஒரே ஜமாஅத்தாக இருந்தார்கள். குர்ஆனையும் சுன்னாவையும் பற்றி பிடிப்பவர்கள் மட்டுமே சரியான அகீதாவில் இருப்பார்கள். அவர்களே ஒன்று படுவார்கள். அவர்கள் தாம் ஒரு வழியில் இருப்பார்கள் என்று அல்லாஹ்வே கூறுகின்றான்.


3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.


20:123. “இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.


ஆகவேதான் நபித் தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் பாதுகாப்பு பெற்ற கூட்டத்தில் இருந்தார்கள்.  


"73 கூட்டங்களாக இச்சமுதாயம் பிரியும் ஒரு கூட்டம் தவிர அனைத்தும் நரகம் நுழையும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அப்போது அந்த ஒரு கூட்டம் யாரென்று கேட்கப்பட்டது 


"நானும் என் தோழர்களும் இன்று எதன் மீது இருக்கின்றோமோ அதன் மீது இருப்பவர்கள்"


என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நபியவர்கள் கூறியது போலவே நடந்தது மக்கள் பலர் தங்களது அகீதாவை குர்ஆன் சுன்னா வழியில் அமைக்காமல் கிரேக்க தத்துவம், தர்க கலை ஆகியவனவற்றின்மீது அமைத்தார்கள் எனவே பிரிவினையில் விழுந்து சமுதாயத்தை அறிவில் தள்ளினார்கள்.



அகீதாவை மார்க்க ஆதாரங்களிலிருந்து மட்டுமே எடுக்க வேண்டும்:


ஒன்றை அகீதாவில் ஏற்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருப்பது கட்டாயம். உண்மையில் மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் ஆதாரம் அவசியம் என்றாலும் அகீதாவிற்கு மிகமிக கட்டாயம். ஏன் தெரியுமா?


மார்க்கம் சொல்லாத, மார்க்கம் கட்டளையிடாத காரியத்தை ஒருவர் செய்தால் அது பித்அத். மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் அனாச்சாரம் என்கின்ற நிலையில் இருக்கும். ஆனால் மார்க்கம் சொல்லாத மார்க்கம் கட்டளையிடாத நம்பிக்கையை ஒருவர் கொண்டிருந்தால் அது ஷிர்க் குஃப்ர் என்கின்ற அளவிற்கு அதிபயங்கர அபாயத்திற்கு கொண்டு போய் விட்டு விடும்.


முந்தியது அதாவது செயலில் வரும் குற்றம் ஒருவரை காபிர் ஆக்கிவிடாது. பிந்தியது நம்பிக்கையில் வரும் குற்றம் என்பதால் அது ஒருவரை காபிராகவும் ஆக்கிவிடலாம். 


இரண்டுக்கும் உதாரணம் சொன்னால் எளிதாக புரியும்.


முஸ்லிம்களில் சிலர் வெள்ளிக்கிழமை இரவை புனிதப் படுத்தும் விதமாக அந்த இரவில் கண்விழித்து வணக்கங்கள் புரிகிறார்கள். வாரம் தோறும் அந்த இரவை எதிர்பார்த்து ஒன்றுகூடி தொழுகை திக்ர் களில் ஈடுபடுகிறார்கள். வெள்ளிக்கிழமையில் மட்டும் நோன்பு வைப்பவர்களும் உண்டு இது சரியா? இல்லை.


காரணம் நபி (ஸல்) அவர்கள் இதை தடுத்தார்கள்.


2103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 13



இவ்வளவு தெளிவான தடை இருந்தும் சிலர் இந்த தவறை செய்கிறார்கள். ஏன் ? காரணம் அவர்கள் ஆதாரத்தை தேடவில்லை. அறியாமை. அமல்  தானே செய்கின்றோம் வெள்ளிக்கிழமை சிறந்த நாள் அல்லவா என்று தாங்களே முடிவு செய்துகொண்டு அல்லது தாங்கள் மதிக்கும் பெரியவர்களின் நடவடிக்கையை அப்படியே பின்பற்றிகிறார்கள்.


இது பித்அத். இந்த பாவத்தால் அவர்கள் காபிர்களாக மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஆதாரத்தை பார்க்காதது மார்க்கத்தில் ஒரு செயல் சம்பந்தபட்ட விஷயத்தில்தான் ஆனால் இதுவே நம்பிக்கை விஷயமாக இருந்தால் உதாரணமாக இந்துக்களில் அவதாரக் கொள்கையை  சொல்லலாம்.


அல்லாஹ் அதாவது கடவுள் மனிதனாக ஒரு பெண்ணின் வயிற்றில் பிறப்பான் என்று அவர்கள் நம்புகிறார்கள் அப்பட்டமாக எந்த ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் மீது ஒரு மகா பொய்யை அவர்கள் சொல்கிறார்கள் நம்புகிறார்கள். இதனால் அவர்கள் நிலை என்ன. அவர்கள் காபிர்கள் இறை நிராகரிப்பாளர்கள். ஆதாரங்களை கவனிக்காமல் ஒருவரின் செயலில் ஏற்படும் பாவத்தை விட நம்பிக்கையில் அகீதாவில் வரும் பாவம் பயங்கரமானது என்பதை இங்கு புரிந்திருப்பீர்கள்.


கொள்கையில் தவறு வருவதற்கு காரணங்கள் என்ன?


1. அறியாமை

2. வரட்டுப் பிடிவாதம்

3. கண்மூடித்தனமாக நம்புதல்

4. வரம்பு மீறுதல்

5. சிந்திக்காது இருத்தல் 

6. குடும்பம் வழிதவறி இருத்தல்

7. கொள்கையை படிக்காமல் இருத்தல்


1.அறியாமை


சரியான அகிதாவை கற்றுக் கொள்ளாமலும், அதை கற்றுக் கொடுக்காமலும் புறக்கணித்து விலகி இருப்பதால் ஏற்படுகின்றது. இதனால் மக்களுக்கு நல்ல கொள்கை தெரிவதில்லை, அதற்கு முரணானதும், எதிரானதும் தெரிவதில்லை. விளைவு அசத்தியம் சத்தியம் ஆகவும் சத்தியம் அசத்தியம் ஆகவும் நம்பப்பட்டுவிடுகிறது. 


உமர் (ரலி) சொன்னார்கள் நிச்சயமாக இஸ்லாமுடைய வலிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்துவிடும். அது அறியாமை காலத்தைப் பற்றிய அறிவு இல்லாத முஸ்லிம்களின் வளர்ச்சியினால் ஏற்படும்.


அறியாமை காலத்தைப் பற்றிய அழிவில்லா முஸ்லீம்களால் தான் இஸ்லாம் வலிமை இழக்கும் என்கிறார்கள் உமர் ரலி. இதற்கு வரலாறு சாட்சி நம்மவர்கள் ஆண்டாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்தார்கள். ஆனால் இஸ்லாமையும் நபிவழியையும் முடக்கிப் போட்டார்கள். அல்லாஹ் கொடுத்த அதிகாரத்தை அவனுடைய மார்க்கத்திற்காக பிரியோகிக்காமல், தங்களுடைய மனோ இச்சைக்காக பிரயோகித்தார்கள். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி தானே.


அறியாமையிலேயே பெரிய அறியாமை ஒருவன் தான் அறியாதவன் என்பதை அறியாமல் இருப்பது. அதன் காரணமாக அறியாமைக்கால நம்பிக்கைகளும் வழக்கங்களும் கூட இஸ்லாமிய சாயத்துடன் அரங்கேறியது. எது அசத்தியம் என்பதை தெரிந்தால்தானே அதில் இருந்து விலகவும் அதனிடம் சிக்காமல் தப்பிக்கவும் முடியும். அசத்தியம் தெரியாததால் அதனிடமே சிக்கி அதையே சத்தியம் என்று நம்புகிறவர்கள் அதிகமானார்கள். அதனால் இன்று வலிமை இழந்து, தலைமை இழந்து நிற்கிறார்கள் முஸ்லிம்கள். 


ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்காவை வெற்றி கொண்ட பிறகு அங்கிருந்து சுமார் 12 ஆயிரம் வீரர்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டார்கள் நபிகளார். ஹுனைன் ஒரு பள்ளத்தாக்கு, மக்காவிலிருந்து பத்து மைல் தூரம் இருக்கும். போகும் வழியில் "தாத் அன்வாத்"  ஒரு மரத்தைக் கடந்து சென்றார்கள். அந்த மரம் காபிர்களிடம் பிரபலமானது. காபிர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட்டால் அம்மரத்தில் தங்களின் ஆயுதங்களை தொங்கவிடுவார்கள் அதை சுற்றி வருவார்கள், தங்கி வணக்கங்கள் புரிவார்கள். ஏன் என்கிறீர்களா? அதன் அருளால் வெற்றி கிட்டும் என்று ஐதீகம்.


எதிரிகளை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இந்த முஸ்லிம்கள் அந்த மரத்தைக் கடந்து வேறு ஒரு பச்சை நிற பெரிய இலந்தை மரத்தை பார்த்தார்கள் அல்லாஹ்வின் தூதரே காபிர்களுக்கு "தாத் அன்வாத்" இருப்பதைப் போல எங்களுக்கும் ஒரு "தாத் அன்வாத்" இந்த மரத்தை ஏற்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். இதற்கு நபி (ஸல்) சொன்ன பதில் தான் முக்கியமானது 


"சுபஹானல்லாஹ் இது மூஸாவின் சமுதாயத்தார் சொன்னது போலவே இருக்கின்றது அவர்கள் வைத்திருக்கும் சிலைகளை போல் எங்களுக்கும் ஒரு சிலையை ஆக்கி வையுங்கள் என்றார்கள் அவர்கள் என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்த அவர்களின் வழிகளை படிப்படியாக பின்பற்றுவீர்கள்".