தப்லீக் ஜமாத் என்பது தில்லி மேவாத்தில் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். நல்ல நோக்கில்தான் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதை அதன் வரலாறு சுட்டி நிற்கிறது.
19ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டு, அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாடுகளிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக் கடமைகள் பற்றி அறியாமல், அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு அல்லாமா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு, துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.
அல்லாமா இல்யாஸ் (ரஹ்) அவர்களால் டில்லி – மேவாத்தில் தப்லீக் இயக்கம் உருப்பெற்ற பிறகு, சமாதிகளில் மண்டியிட்டவர்கள் பள்ளிப் பக்கம் விரயலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. மார்க்க ஈடுபாடும் நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.
இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. 7 வருடங்கள் மதரசாவில் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத் தகுதிபெற்றவர்கள் என்ற நிலை, இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதுவெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள்.
அல்லாமா இல்யாஸ் (ரஹ்) மற்றும்அவர்களின் புதல்வர் யூசுப் ஆகியோரின் மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தின் அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள் என்ற விமர்சனம் உள்ளது.
மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சிகள் நடைபெற்றதாக அதன் வரலாற்றில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தப்பணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி. மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் ஆவார். இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.
மக்களை மார்க்கத்தின் அடிப்படையில் அழைத்திட தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் ஸகரிய்யா சாஹிப் எழுதிய கற்பனைகளும், கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அல்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதிய வேதமாக ஆகிவிட்டது. இஸ்லாம் அனுமதிக்காத கற்பனைகளை மார்க்கமாக நம்புவது இவர்களின் வழக்கமாகிவிட்டது.
அதேபோல், தனிமனித வழிபாட்டை இவர்களிடம் அதிகமாகக் காண முடியும். அமீர் ஸாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முஸாபஹா செய்யும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அமீர், இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முஸாபஹா செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முஸாபஹா செய்கின்றனர். இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது.
பெரியார் கதைகள் என்று இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது, மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக, பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தக் கப்ஸாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இவற்றைச் சிந்தித்துப் பார்த்தால், இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான விஷயங்களும் இருப்பதைக் காணலாம்.
முழு மனித குலத்துக்கும் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் நபியின் ஹதீஸ்களிலும் ஏராளமாக இருக்கிறது. இஸ்லாத்தின் உபதேசங்கள், கொள்கை கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் ஆகிய அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. ஆனால், பொய்யான தகவல்களை மக்கள் மன்றில் முன்வைக்கும் போது, மக்கள் அறியாமையில் மூழ்கி மார்க்க விரோத விடயங்களில் ஈடுபாடு கொண்டுவிடுகின்றனர்.
தஃலீம் தொகுப்பில் ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சிந்தனையை, கதைகளை சேர்த்து இருக்கிறார் . ஆனால், ஹஸ்ரத் ஜி யின் சம்பவங்கள் ஆயிரம் என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ்.எஸ்.மவ்லானா என்பவர் அத்தனையையும் முழுக் கற்பனையிலேயே தொகுத்துள்ளார். ஒரு குர்ஆனிய வசனமோ ஒரு ஹதீஸோ அவருடைய நூலில் இடம்பெறவில்லை.
எனினும், தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் போன்று, ஹஸ்ரத் ஜி யின் சம்பவங்கள் ஆயிரம் என்ற நூலிலும் உள்ளன. எனவே, அவற்றை அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.
அந்த நூலில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் பஷாரத், கனவிலும் ஹஜ்ரத் ஜீ (ரஹ்), துஆவில் திருந்திய வாலிபன் என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இந்த நூலில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.