ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?
கேள்வி 1 :
ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?
(அல்லது) ரமழான் முழுவதும் நோன்பு நோற்க ஒரு நிய்யத் மாத்திரம் போதுமானதா.?
ஒருவர் எப்போது தனது நிய்யத்தை வைக்க வேண்டும்.?
பதில் :
நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :
إنما الأعمال بالنية و إِنَّمَا لِكُلِّ أَمْرِي مَا نَوَى
‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.’
(📖 நூல் : ஸஹீஹ் புகாரி 1)
ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகும். எனவே, வெளிப்படையாக தெரிவது என்னவெனில் ஒருவர் ஒவ்வொரு நாளும் (தனித்தனியே) நிய்யத் வைக்க வேண்டும்.
சிலர் கூறுவதைப் போல நிய்யத் என்பது வாயால் மொழிவது அல்ல.! மாறாக, உள்ளத்தால் எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும்.
ஒரு நபர் சஹர் நேரத்தில் நோன்பு வைப்பதை நாடி (படுக்கையிலிருந்து) எழுவதே நோன்புக்கான நிய்யத்தாக கருதப்படும். அதேபோல உணவு மற்றும் பானத்திலிருந்து தவிர்ந்திருப்பதும் நோன்பிற்கான நிய்யத்தாக கருதப்படும்.
மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா?
கேள்வி 2 :
நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா?
மேலும் நிய்யத்தை சத்தமாக கூற அனுமதியுள்ளதா? அதேபோல, நோன்பை முறிக்கும் போது கூறவேண்டிய துஆக்கள் ஏதேனும் உள்ளதா? ஆம் எனில் அந்த துஆவை சத்தமாக ஓதலாமா?
பதில் :
நோன்பின் நிய்யத்தை வைப்பதற்கென (ஸுன்னாவில்) குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவுமில்லை.
நோன்பை முறிக்கும் போது கூறப்படும் துஆவை பொறுத்தளவில், அஹ்லுல் இல்ம் எனும் கல்வியாளர்களில் சிலர் கீழ்க்கண்ட துஆவை ஆதாரமாக கருதுகிறார்கள்.
” ذَهَبَ الظَّمأ وابتلت العُرُوقُ وثَبَتَ الْأَجْرُ إِن شَاءَ اللَّهُ”
“தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால், கூலி நிச்சயம்.” (நூல் : அபூதாவூத் 2357)
இருப்பினும், குறிப்பான துஆ என்று எதுவுமில்லை. உண்மையில், ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :
فطره إن للصائم دَعْوَة مُسْتَجَابَة عَنْدَ
“நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆவிற்கு பதிலளிக்கப்படுகிறது”. (நூல் : ஸுனன் இப்னு மாஜா)
எனவே, நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும், இன்னபிற தேவைகளையும் துஆ செய்ய வேண்டும்.
மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 3
பல வருடங்களாக தொடர் நோயின் காரணமாக ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் நபர் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?
📝 பதில் :
குறித்த நோயானது குணப்படுத்த முடியாதது என மருத்துவர்கள் கண்டறிந்தாலும், நிச்சயமாக அல்லாஹு தஆலா அதனை குணப்படுத்த ஆற்றலுடையவன்.
ஆனாலும், குறித்த நோயானது (அவ்வளவு எளிதில்) குணமாக்க முடியாதது என்று முடிவு செய்யப்பட்ட ஒர் நபர் மீது எவ்வித குற்றமுமில்லை. அந்நபர் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது அவசியமாகும்.
அல்லாஹு தஆலா கூறுவதாவது :
وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
“…. (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்…”
(அல்குர்ஆன் 2:184)
மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 4 :
ரமழான் மாதத்தின் பகல் நேரங்களில் மிஷ்வாக், அல்லது பற்பசை (Toothpaste) பயன்படுத்துவது பற்றிய மார்க்கச் சட்டம் என்ன.?
📝 பதில் :
மிஷ்வாக் (குச்சிகளை) பயன்படுத்துவதைப் பொறுத்தளவில், அவைகள் மரத்தின் வேர்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது; அவைகளால் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை.
பற்பசைகளை (Toothpaste) பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவது ஹராம் என்று கூற என்னிடம் ஆதாரம் இல்லையென்றாலும், அவைகளை விட்டும் நாம் தவிர்ந்திருப்பது சிறந்தது என்றே நான் அறிவுரை கூறுகிறேன்.
மிகவும் முக்கியமானது என்னவெனில்,ஒரு நபர் (நோன்பின் போது) தன் வயிற்றுக்குள் எதுவும் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நபி ﷺ அவர்கள் கூறுவதாவது
وبالغ في الاستنشاق إلا أن تكون صائمًا
“உங்களில் ஒருவர் ஒழு செய்வதற்காக தம் மூக்கை சுத்தம் செய்யும்போது, தண்ணீரை மூக்கில் செலுத்த வேண்டும்; நோன்பாளியை தவிர…”
(நூல் : ஸுனன் அபூதாவூத் )
நோன்பாளியாக இருப்பவர் அவரது வயிற்றில் தண்ணீர் சென்று அதன் மூலமாக நோன்பு முறிந்துவிடுமோ என்று அவர் அஞ்சுவதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 5 :
நோன்பின்போது வாசனைத் திரவியம் அல்லது நறுமணம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன…?
📝 பதில் :
வாசனைத் திரவியம் அல்லது நறுமணத்தை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவதில் எவ்வித பிரச்சனையுமில்லை (இன்ஷா அல்லாஹ்…)
ஆனாலும், (அதிகமான) ஆல்கஹால் கலந்துள்ள Colognes போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; நிச்சயமாக இந்த வாசனைத் திரவியங்களில் ஆல்கஹால் கலந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. (ஆகையால் இவைகளைப் பயன்படுத்த அனுமதியில்லை).
📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 6:
திரவ வடிவில் காணப்படும் சொட்டு மருந்துகளை (Ear Drops, Eye Drops,…) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?
📝 பதில் :
இது விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாடுகளை விட்டும் நாம் தவிர்ந்துகொள்ளும் பொருட்டு, நான் கூறுவது என்னவெனில் (நோயாளியாக) இருக்கும் ஒருவர் தமது நோன்பை விடட்டும்.
அல்லாஹு தஆலா கூறுவதாவது :
وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ
“… உங்களில் யாரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணியாகவோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்….”
(அல்குர்ஆன் 2:184)
எவனே, ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருந்து மாத்திரைகளின்பால் தேவையுள்ளவராக காணப்பட்டால், அவர் தம்முடைய நோன்பை விட்டுவிட்டு அதனை வேறு நாட்களில் திரும்ப நோற்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.
ஆனால், (நோய்வாய்ப்பட்ட சமயத்திலும்) ஒருவர் தம் நோன்பை விட வில்லையானால், அவர் எடுக்கும் திரவ மருந்துகள் தம் தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).
📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 7:
ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் மருந்து ஊசிகளை (Injections) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?
பதில் :
அத்தகைய ஊசிகள் ஊட்டமளிக்கக் கூடியவையாக இருந்தால், அவைகளை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; அதே சமயம் ஊட்டமளிக்காத ஊசிகளை பொறுத்தளவில் அதனை பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
நான் முன்னர் கூறியது போல, நோயாளியாக இருப்பவர் நோன்பை விட்டுவிட்டு, அதனை வேறொரு நாட்களில் வைத்துக்கொள்வதே பொருத்தமானதாக கருதுகிறேன்.
கேள்வி 8:
ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..?
📝 பதில் :
மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது.
ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :
مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ، و مَنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ
“(வேண்டுமென்றே இல்லாமல் எதேச்சையாக) ஒருவர் வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க தேவையில்லை. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க வேண்டும்.”
பார்க்க : [முஸ்னத் அஹ்மத் 10463, அபூதாவூத் 2380, திர்மிதீ 720 || இமாம் அல்பானி رحمه الله அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என இர்வாவுல் ஙலீல் (4/51)-ல் கூறியுள்ளார்கள்].
கேள்வி 9:
ரமழானின் பகல் நேரத்தில் நீச்சல் மற்றும் Diving செய்வதன் மார்க்கச் சட்டம் என்ன..?
📝 பதில் :
(அவ்வாறு செய்யலாம்), ஆனாலும் தண்ணீர் அவரது தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியமானது.
குறித்த நபர் கடலில் குளிக்கும்போது கடல்நீர் உப்பாக இருந்தால், அது தொண்டையை சென்றடைய வாய்ப்புள்ளது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் கடலில் நீந்தியுள்ளேன்; நாம் கவனிக்காத போது கடல்நீர் நம் தொண்டையை அடைந்துவிடும். எனவேதான் (நோன்பு நோற்ற நிலையில்) கடலில் குளிப்பதை தவிர்க்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.
கடல்நீர் உப்பாக இல்லாவிட்டால், அது நம் தொண்டையை அடையாது, எனினும் சிலபோது அவ்வாறு அடைய வாய்ப்புள்ளது.
📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 10
நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.?
📝பதில் :
அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).
கேள்வி 11:
ரமழானின் பகல் பொழுதில் (நோன்பு நோற்ற நிலையில்) தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?
📝பதில் :
நபி ﷺ அவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :
“அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ﷺ) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றார். நபி (ﷺ) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ﷺ) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள்.. அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக்கூடையாகும். நபி (ﷺ) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய(வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது? உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடைய வீட்டார் எவருமில்லை என்று கூறினார், அப்போது நபி (ஸல்) அவர்கள் போ! (போய்) உன் வீட்டாருக்கு இதை உண்ணக் கொடு என்று கூறினார்கள்.”
(நூல் : ஸஹீஹ் புகாரி 2600)
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில்,
✅ நோன்பு நோற்ற நிலையில் உடலுறவு கொண்ட நபரிடம் அடிமைகள் இருந்து அதனை அவர் விடுவிக்க முடியுமாக இருந்தால், அவர் அதனை செய்யட்டும்;
✅ அவ்வாறு முடியாவிட்டால், அவர் தொடர்ச்சியாக 2 மாதங்கள் நோன்பு நோற்கட்டும்.
✅ நோன்பு நோற்க சக்திபெறாதவர், அதற்கு பகரமாக 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
✅ நோன்பு நோற்க சக்திபெற்றுள்ள நபர், ஏழைகளுக்கு உணவளிக்க முடியாது. ஏனெனில் ஏழைகளுக்கு உணவளிப்பதானது வசதியுள்ள ஒருவருக்கு மிக லேசான காரியமாகும்; அதேசமயம் 2 மாதம் நோன்பு நோற்பதானது கடினமானதாகும்.
📝மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 12:
ரமழானின் பகல் பொழுதில் தூக்கத்தின்போது கனவு ஏற்பட்டு, அதன்மூலம் விந்து வெளியேறினால் அதனுடைய சட்டம் என்ன.?
பதில் :
அவர் மீது எந்த குற்றமுமில்லை; அவர் அன்றைய நோன்பை முழுமைப்படுத்தட்டும்.
மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
கேள்வி 13 :
ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?
பதில்:
🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:
▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.
▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
▪️ அவர்கள் வேறொரு நாளில் அந்த நோன்புகளை கழா செய்ய வேண்டும்.
▪️ அதேபோன்று எப்போதும் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகளும் இருக்கின்றார்கள்.
▪️ அவர்கள் நோன்பு நோற்றால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
▪️ அப்படிப்பட்டவர்கள் நோன்பு நோற்பதை தவிர்த்து ஒவ்வொரு நோன்பிற்க்கும் ஃபித்யா (ஒரு ஏழைக்கு உணவளிக்க) வேண்டும்.இதுவே அந்நோன்புக்கான பரிகாரமாகும்.