Monday, September 30, 2024

அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்

அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்


இஸ்லாம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களும் அல்லாஹ்விடமிருந்து வந்துதான். அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீயாக வந்த அல்-குர்ஆனும் சுன்னாவும் தான் அதன் அடிப்படை மூலாதாரங்கள். இது பற்றி அல்-குர்ஆனும் சுன்னாவும் பல இடங்களில் பேசுகின்றன.


நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விடயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் – இது தான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்-குர்ஆன் 4:59)


முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் ‘நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்’ என்பது தான், இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ – அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் 24:51-52)


மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்-குர்ஆன் 33:36)


4:65. உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.


28:50. (பின்னர்) உமக்கவர்கள் பதில் கூறவில்லையானால், நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்களின் மனோ இச்சைகளைத்தான் என்று உறுதியாக நீர் அறிந்துகொள்வீராக! அல்லாஹ்விடமிருந்துள்ள நேர் வழியை அன்றி தன்னுடைய மனோ இச்சையைப் பின்பற்றியவனை விடவும் மிக வழிகெட்டவன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான். 


24:63. உங்களுக்கு மத்தியில் சிலர் சிலரை (ப்பெயர்கூறி) அழைப்பது போன்று அல்லாஹ்வின் தூதரின் அழைப்பை (முஹம்மதே என்று கூறி) ஆக்கிக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக உங்களில் (கூட்டத்திலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களே அத்தகையவர்களை, அல்லாஹ் அறிவான், ஆகவே, (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே, அத்தகையவர்கள், (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்துவிடுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்.


49:1. விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னிலையில் நீங்கள் முந்தாதீர்கள், மேலும், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.

நபி (ஸல்) அவர்களும் இந்த அடிப்படையை வலியுறுத்திப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார்கள். உதாரணமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்படலாம்.

 (مسند أحمد – (28 / 410 … عنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ الْكِنْدِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ أَلَا إِنِّي أُوتِيتُ الْقُرْآنَ وَمِثْلَهُ مَعَهُ 

‘நான் அல்-குர்ஆனையும் அது போன்ற ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்.’ (அஹ்மத்) 

அல்-குர்ஆனும் சுன்னாஹ்வும் தான் மார்க்கத்தின் அடிப்படை என்பதை அதிகமான மக்கள் புரிந்து கொண்டாலும் கூட அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவதை காண முடிகின்றது. அவை இரண்டையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாகும். இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனையும் சுன்னாவையும் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்களை அல்-குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.


1) நபித் தோழர்கள் சென்ற வழியில் (மன்ஹஜுஸ் ஸஹாபா) நின்று விளங்குதல்:


அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கவும், வழிகேடுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளவும் இது முக்கியமான ஓர் அம்சமாகும்.


இஸ்லாத்தில் நபித்தோழர்களுக்கு மிகச் சிறந்த அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹுத் தஆலா அவர்களைப் புகழ்ந்து அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறியுள்ளான்.


இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின்தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான், அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள், அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்-குர்ஆன் 9:100)


முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார், அவருடன் இருப்பவர்கள் காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்குக்கிடையே இரக்கம் மிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜுது செய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜுதுடைய அடையாளமிருக்கும், இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்; இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில் அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 48:29)


நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்கள்:


النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ.


‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


இவ்வாறு அவர்களின் சிறப்புக்கள் பற்றிக் கூறுகின்ற ஏராளமான ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.


நபித் தோழர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். எனவேதான் அல்-குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித் தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.


இதுபற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:


‘அகீதாவுடைய விஷயத்தில் முஸ்லிம்கள் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அவற்றில் ஒன்று, அல்-குர்ஆன் சுன்னா வாசகங்கள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளல். இதற்காக அல்-குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், ஏனைய உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள் என்பதையும் அறிதல் வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனையும் சுன்னாவையும் நபித் தோழர்களுக்குப் போதித்தபோது அதன் மூலம் தான் நாடும் கருத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். இந்தவகையில் நபித் தோழர்கள் அல்-குர்ஆனை மனனமிட்டதைவிட அதன் கருத்துக்களைப் பூரணமாகப் புரிந்து கொண்டார்கள் எனலாம்’ (மஜ்மூஉல் பதாவா 17/353)


இமாம் சாத்திபீ (ரஹ்) அவர்கள் இதுபற்றி பின் வருமாறு கூறுகிறார்கள்:


‘ஸலஃபு ஸ்ஸாலிஹீன்கள் (ஸஹாபாக்கள், தாபியீன்கள் , அவர்களைத் தொடர்ந்து வந்தோர்) அல்குர்ஆன் மற்றும் அதனுடன் தொடர்பான கலைகள் பற்றி மிக்க ஞானமுள்ளவர்களாக இருந்தனர் ‘ (அல்-முவாஃபகாத் 2/79)


மேலும் இப்னு அப்தில் ஹாதீ (ரஹ்) அவர்கள் இந்த விடயம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறார்கள்:


‘அல்-குர்ஆன் சுன்னாவுக்கு ஸலபுகளுடைய காலத்தில் இல்லாத விளக்கத்தைக் கொடுப்பது கூடாது. அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் அறிவிலிகளாகவும், வழிகேடர்களாகவும் இருந்துள்ளனர் என்ற கருத்தையே அது கொடுக்கும்’ ( அஸ்ஸாரிமுல் முன்கீ, பக்கம்: 427)


இதே கருத்தைத்தான் குர்ஆன் சுன்னாவை ஆழமாகக் கற்ற அறிஞர்களில் அனேகமானவர்கள் கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


இவற்றிலிருந்து அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில் நின்று விளங்க முயற்சிக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த அம்சம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை (அகீதா) விஷயத்தில் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.


ஏனெனில் அகீதாவுடன் தொடர்பான அல்-குர்ஆன் சுன்னாவை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டபோதே இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகேடுகள் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.

No comments:

Post a Comment