Thursday, September 3, 2026

யார் இந்த வஹ்ஹாபிகள்

 ஒரு முறை சவூதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல்யமான மார்க்க அறிஞரான டாக்டர் முஹம்மத் ஷுவையிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மொரித்தானியா நாட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது , வழியில் மொரோக்கோ நாட்டில் ஆறு நாட்கள் தங்குவதற்கு ஓர் சந்தர்ப்பத்தை பெற்றார்கள்,

அங்கு சிறந்த முறையில் ஷேக் ஷுவையிர் அவர்கள் மொரோக்கோ நாட்டின் உலமாக்களால் வரவேற்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டார்கள்,
அப்பொழுது முக்கியமான உலமாக்கள் மத்தியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் அவர்களும் ஏனைய மற்ற முரோக்கோவின் உலமாக்களும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு அறிஞர் தங்களின் சவூதி அரசாங்கம் மிகச் சிறந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறது முழு உலகத்திலும் முஸ்லிம்களுக்கு பள்ளிவாயில்கள் கட்டித் தருவது இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற பல சேவைகளை செய்கிறார்கள் ஆனால் தங்களுடைய கொள்கையில் "வஹ்ஹாபிய", கொள்கையை மேற்கொள்கிறார்கள் அதை விட்டு விட்டால் சிறந்ததாக இருக்கும் என்ற ஒரு செய்தியை முன் வைக்கிறார்.
அப்பொழுது அங்கு பல மணி நேரங்கள் ஆரோக்கியமான சில உரையாடல்கள் தொடர்கின்றன, அதன் சுருக்கத்தை இங்கு பார்ப்போம் வாருங்கள் !!
டாக்டர் அவர்கள் கேட்கிறார்கள் இந்த அளவுக்கு வெறுப்பைக் கொண்டுள்ள நீங்கள் எதை முன் வைத்து வஹ்ஹாபிகள் வழிகேடர்கள் என்று கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது
அவர் மொரோக்கோ அரசாங்கத்தின் சார்பாக 13வாளியம்களில் மாலிகி மத்ஹபை தழுவிய இஸ்லாமிய மார்க்க சட்டங்களின் ஃபத்வா தொகுப்பு ஒன்று இலவசமாக அனைவருக்கும் வெளியிடப்பட்டிருப்பதை பற்றிச் சொன்னார் .
புத்தகத்தின் பெயர் அல்மிஃயாருல் முஃரப் பீஃ பஃதவா அஹ்லில் மஃரிப்
(المعيار المعرب على فتاوى اهل المغرب )
அஷ்ஷேக் அஹ்மத் பின் முஹம்மத் அல்வன்ஷுரைஸி என்பவர் தொகுத்திருக்கிறார், அதில் இமாம் அலி லுஹமி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது வஹ்ஹாபிகள் கட்டிய பள்ளிகளில் தொழுகலாமா ?
அதற்கு முப்ஃதி லுஹமி அவர்கள் இந்த பிரிவினர் காஃபிரான குழப்பவாதிகள் இவர்களின் பள்ளியை இடிக்க வேண்டும் இந்த சிந்தனை உடையவர்களை உடனே நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது.
இதை என்னிடம் அந்த மொரோக்கவைச் சேர்ந்த அறிஞர் ஆதாரம் காட்டி இந்த முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தியின் வஹாபிய கொள்கையை தானே உங்கள் சவுதி அரேபியாவும் பின்பற்றுகிறது என்று சொன்னார் ,
உடனே அதற்கு டாக்டர் அவர்கள் நிதானமாக பதில் சொன்னார்கள் முப்ஃதி லுஹமி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை அவர் மட்டுமல்ல ஏனைய அந்தலூசிய (ஸ்பெயின்),வட ஆப்பிரிக்க உலமாக்களும் பல காலங்களுக்கு முன்பே இந்த கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என்று அவர் சொன்ன பொழுது அவர்கள் ஆச்சரியத்துடன் என்னை பார்த்தார்கள் !!!
அவ்வாறு இருக்க ஏன் நீங்களும் உங்கள் அரசாங்கமும் இந்த வழிகெட்ட வஹ்ஹாபிய கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்று சொன்ன பொழுது டாக்டர் அவர்கள் அற்புதமான முறையில் பதில் கூற ஆரம்பித்தார்கள்...
நான் மறைக்கப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்றை உங்களுக்கு சொல்வதற்கு முன்பாக சற்று வருடங்களை நாம் கணக்கிட வேண்டும் என்று சொல்லியவர்களாக டாக்டர் அவர்கள் தொடர்ந்தார்கள்.....
இமாம் அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழ்ந்து மறைந்த காலம் ஹிஜ்ரி 1206 ம் ஆண்டு (கிபி 1791) .
இந்த பஃத்வா புத்தகத் தொகுப்பை தொகுத்த அஹ்மத் பின் முஹம்மத் அல்வன்ஷுரைஸி வாழ்ந்த காலம் ஹிஜ்ரி 914 ம் ஆண்டு சுமார் 212 வருடங்கள் அல்வன்ஷுரைஸி அவர்களுக்கும் நஜ்தி அவர்களுக்கும் மத்தியில் வித்தியாசம் இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் முப்ஃதி ஸாஹிப் வாழ்ந்து மறைந்த காலம் ஹிஜ்ரி 478 ம் ஆண்டு .
முப்ஃதி ஸாஹிபுகும் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களுக்கும் மத்தியில் நிகழும் கால அளவு 728 வருடங்கள் பழையது.
இவ்வளவு நீண்ட வருடங்களை கொண்ட ஆலிம் பெருமக்கள் எவ்வாறு பின்னால் வர இருக்கக்கூடிய நஜ்தி அவர்களை பற்றி வழிகேடர் காஃபிர் என்று ஃபத்வா தர முடியும் ?
இந்த கேள்வியை முன் வைத்தவுடன் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களும் வாய் மூடி போய்விட்டனர்.
அதற்குப் பிறகு டாக்டர் ஷுவையிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் ரஸ்த்தும் என்ற அசலான வஹாபிய இயக்கத்தை தோற்றுவித்த அந்த வழிகேடரை பற்றிய செய்திகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இன்றும் நாம் கைவசம் இருக்கும் பல புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அங்கிருந்த நூலகத்திலிருந்து ஆதாரங்களை காட்டினார்.
ஆல்பஃரட்பில் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கீழேத்திய அறிஞர் (ஓரியன்டலிஸ்ட)
"வட ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய பிரிவினர்கள்"
(الفرق الاسلامية في شمال إفريقية )
என்னும் வரலாறு என்ற புத்தகத்தில் அப்துல் வஹ்ஹாப் பின்
அப்துர் ரஹ்மான் பின் ருஸ்துமைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பதையும் கூடுதலாக ஆதாரத்தை காட்டினார்.
அல்அஃலாமில் இமாம் ஸர்கலியும் இவர் ஹிஜ்ரி 190 ல் மறைந்தார் என்ற தகவலை குறிப்பிடுகிறார்.
(கட்டுரை பெரிதாக விடும் என்ற காரணத்தினால் புத்தகங்கள் குறிப்பை சுருக்கிக் கொள்கிறேன்)
ஹிஜ்ரி 2 ஆம் நூற்றாண்டில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியாவில் அன்றைய (மேற்கத்திய மொரோக்கோ)
அப்துல்வஹ்ஹாப் பின் அப்துர்ரஹ்மான் பின் ருஸ்தும் என்பவரால்
"வஹாபிய இபாழிய்யா"
-الوهابية الإباضية
இயக்கத்தை தோற்று வைக்கப்பட்டது,
இவரின் அத்துமீறிய ஷரீஅதிற்க்கு முரண்பட்ட பல நடவடிக்கைகளால் அல்ஜீரியாவில் இருக்கும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்கள் இவரை மக்கள் மன்றத்தில் கடுமையாக விமர்சித்தனர் ,
இவருடைய ஆட்சிக்காலத்தில் அல்ஜீரிய மக்களுக்கு ஹஜ் செய்வதை தடை செய்தார் தொழுகையை தடை செய்தார் மன இச்சையை மார்க்கமாக ஆக்கினார்.
இவர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதை எந்த அளவுக்கு வெறுத்தாரோ அதற்கு நிகராக ஷிஆகளையும் வெருத்தார் , இவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக நஹர்வான் என்ற இடத்தில் போரிட்ட கவாரிஜுகள் ஆவர்,
இவரின் கொள்கை சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் தற்போதைய ஓமன் அரசாங்கமே இயங்கிக்கொண்டிருக்கிறது,
அன்றைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்கள் இவரைப்பற்றி மக்களிடத்திலே வஹாபிய வழிதவறிய இயக்கம் என்று கடிந்துறைத்தனர்.
ஹம்பலி மத்ஹப் சார்ந்த இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சீர்திருத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாத சமாதி வழிபாடுகளை செய்து கொண்டிருந்த ஷீஆக்கள் சவப்பெட்டிக்குள் அடக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த வஹாபிய வரலாறுகளை அவர் மீது சத்தியமான உலமாக்கள் கூறியிருந்த மார்க்க தீர்ப்புகளை கூடுதலாக புனைந்த கட்டுக்கதை தான் இந்த "வஹாபிசம்",
ஷீஆக்களின் கொள்கையை இம்மியளவும் பசங்காமல் பின்பற்றும் நமது இந்திய பரேல்விய பித்அத்வாதிகளும் இன்றளவும் ஷிர்க்கை பித்அத்தை எதிர்க்கக்கூடிய உலமாக்களுக்கு சூட்டும் மாலை தான் இந்த "வஹாபிசம்",
இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒருமிகப் பிரபலமான அறிஞரான இந்தியாவைச் சேர்ந்த அல்லாமா அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
" இஸ்லாமிய சிந்தனை இன்னும் அழைப்பிதழின் நாயகர்கள்"
(Saviours of Islamic sprit )(رجال الفكر و الدعوة )
என்ற புத்தகத்திலும் இந்தியாவைச் சேர்ந்த மௌலானா மன்ஷுர் நுஃமானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
"دعايات مكثفة ضد الشيخ محمد بن عبد الوهاب
النجدي "
அஷ்ஷேக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களுக்கு எதிரான தவறான பரப்புதல்கள்" என்ற புத்தகத்திலும்,
"அநீதம் இழைக்கப்பட்ட சீர்திருத்தவாதி ",(المصلح المظلوم )
என்று இந்தியாவைச் சேர்ந்த மஸ்ஊத் ஆலம் நத்வி அவர்களும்
இமாம் அவர்களை பற்றி புகழ்ந்து அவரின் ஏகத்துவச் சீர்திருத்தங்களை பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இமாமவர்கள் ஏகத்துவ கொள்கையை அன்றைய அரபு தீபகற்பத்தில் வேரூன்றினார்கள் இணைவைத்தல் ,சமாதி வழிபாடு போன்றவற்றை அறவே களைந்தெரிந்தார்கள் என்ற கால்ப்புணர்ச்சியில் யாரெல்லாம் அனாச்சாரங்களையும் இணைவைத்தல்களையும் ஏகத்துவத்தை உரக்கச் சொல்கிறார்களோ அவர்களுக்கு "வஹாபிகள் ", என்ற பெயர் இந்த ஷீஆக்களால் வைக்கப்பட்டு இன்றைய வழிகெட்ட பரேலவிகளால் மெருகூட்டப்பட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
சவுதி அரேபியாவில் பிறந்த டாக்டர் முஹம்மத் ஷுவையிர் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள்
تصحيح خطأ التاريخي حول الوهابية
"வஹாபிகள் சம்பந்தமாக வரலாற்றில் ஏற்பட்ட தவறின் திருத்தம்", என்ற புத்தகம்
112 பக்கங்கள் கொண்டது இதில் இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறார்.
இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்க விரும்புவோர் இந்த சுட்டியை சொடுக்கவும் 👇
கூடுதலான தகவல்களுக்கு எனது யூடியூப் காணொளியை பார்க்கவும்


இந்திய அறிஞர்கள் குறிப்பாக பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை போன்ற நாடுகளிலும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து நாம் வரலாற்று பக்கங்களை பார்த்தால் பல அறிஞர்கள் வஹ்ஹாபிய இயக்கம் வழிகேடான ஒன்று அதை தோற்றுவித்தவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி, அவர் ஒரு வழிகேடர் என்று பல வரலாற்று குறிப்புகளை நமக்கு தருகிறார்கள்.
அல்லாஹ்வின் அருளால் எப்பொழுதுமே மாற்றுக் கருத்து உடையவர்களின் புத்தகங்களை படிப்பதும் ஆய்வுக்கு உட்படுத்துவதும் வளமையாக கொண்டிருக்கிறோம்,
மாற்றுக் கருத்து உடையவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் நாம் பார்க்கும் பொழுது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த அஷ்ஷேக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அத்தமீமி - (மரணம் -1792) ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்க சேவைகளை தவறாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு முக்கியமாக அமைந்த விடயம் ஹிஜாஸில் உஸ்மானிய பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்த மக்கா மதினாவில் அன்று உஸ்மானிர்கள் ஆட்சி வீழ்ச்சி அடையும் தருணத்தில் முதலாம் சவுதி அரேபியா (இமாம் முஹம்மத் பின் சவூத்) காலகட்டத்தில் மக்கமா நகரில் அன்று மிகவும் சிறப்பான முறையில் ஃபத்துவாக்களை வழங்கிக் கொண்டிருந்த ஷாபிஃ மத்ஹபின் தலைசிறந்த அறிஞராக கருதப்பட்ட அஷ்ஷேக் அஹ்மத் ஜெயினி தஹ்லான்
அவர்கள் கடுமையாக இமாம் நஜ்தி அவர்களை விமர்சித்தும் எழுதியும் வந்தார்கள்.
காரணம் இமாம் நஜ்தி அவர்கள் இணை கற்பித்தல் பித்அத்தான வழிமுறைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரானவர்களாக இருந்ததால் , மண்ணறைகளை சந்திப்பதில் இஸ்லாம் வகுத்திருக்கும் முறைகளை புறக்கணித்து வணக்க ஸ்தலங்களாக மாற்றி அமைத்திருந்த அந்த காலகட்டத்தில் கடுமையாக எதிர்த்து வந்தார்கள்.
அஷ்ஷேக் தஹ்லான் அவர்கள் இமாம் நஜ்திக்கு எதிராக இரண்டு புத்தகங்கள் எழுதினார்கள் فتنة الوهابيين
பிஃத்னதுல் வஹ்ஹாபியீன்,
الدرر السنية في الرد على الوهابية
அத்துறர் அஸ்ஸனிய்யா பிஃர் ரத்தி அலல் வஹ்ஹாபிய்யா .
இவரின் இரண்டு மாணவர்களான
அஷ்ஷேக் அலவி அஹ்மத் அஸ்ஸக்காப்ஃ,
அஷ்ஷேக் முஹம்மது நவவி ஜாவி இருவரும் தனது உஸ்தாதின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்தோனேசியா வரை எங்கெல்லாம் ஷாபி மத்ஹப் பரந்து விரிந்து இருக்கிறதோ அங்கெல்லாம் வஹாபியர்கள் வழிகேடர்கள் என்ற பிரச்சாரத்தை செய்து வந்தார்கள்.
இது அரபு உலகத்திலும் இஸ்லாமிய உலகத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆக அன்று உலமாக்கள் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களைப் பற்றி அதிகமாக தவறாக விமர்சனம் செய்து எழுதிய காரணத்தினால் இந்தியாவைச் சேர்ந்த சிறந்த உலமாக்கள் கூட எழுதப்பட்ட விஷயங்களை வைத்து இமாம் நஜீதி அவர்களை கடுமையாக விமர்சித்து எதிர்த்தும் வந்தார்கள்.
அதற்கு ஏற்றவாறு இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அனாச்சாரங்கள் பித்அத்துக்களை முழு இந்தியாவிலும் பரப்பிய சிறப்பிற்குரிய அறிஞர் அஹ்மத் ரிழா கான் பரேல்வி ஹுஸாமுல் ஹரமைன் (حسام الحرمين)
என்ற புத்தகத்தை எழுதி அன்று இந்தியாவில் மூடநம்பிக்கையில் இணை கற்பித்தல் போன்ற செயல்களை கடுமையாக விமர்சனம் செய்து எதிர்த்து வந்த தேவ்பந்து ( தாருல் உலூம் தேவ்பந்த் - யூபி) வஹாபிகள் என்று கூறினார்.
இவர்களும் அந்த காலத்தில் இருந்த அஹ்லுல் ஹதீஸ், காதியானிகளும் ஜிந்தீகுகள் , மூர்த்தத்துகளான மதம் மாறியவர்கள், எனவே இவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார்.
இவர் எழுதிய இந்த புத்தகத்திற்கு மறுப்பாக அன்று தேவ்பந்து இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சிறந்த அறிஞராக விளங்கிய இமாம் ஹுசைன் மதனி ரஹிமஹுல்லாஹ் (மதீனா முனவ்வராவில் தங்கியிருந்தவர்) அஷ்ஷிஹாபு அஸ்ஸாகிபு (الشهاب الثاقب)
என்ற புத்தகத்தில் தேவ்பந்து அறிஞர்களுக்கும் வஹாபிய இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, குறிப்பாக முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள்.
இது கூடுதலாக வட இந்தியாவில் சிறந்த உலமாக்களாக அன்று சேவை புரிந்த பலர் இமாம் நஜ்தியை பற்றி தவறான கண்ணோட்டத்தை கொள்ள வைத்தது.
அதுமட்டுமில்லாமல் ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு விளக்க உரையாக எழுதப்பட்ட பைஃலுல் பாரி (فيض الباري )
இமாம் அன்வர்ஷா கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பாடம் நடத்தியதில் எழுதப்பட்ட நான்கு வாளியம்கள் கொண்ட புத்தகம் ,
அதில் இமாம் கஷ்மீரி அவர்கள் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்கள் புத்தகத்தில் "கிதாபுல் இல்மி", என்ற பகுதியில் அறிஞர்கள் குறிப்பிட்ட நாட்களில் பயான் செய்வதற்கு நேரங்களை ஒதுக்குவது என்ற ஒரு தலைப்பில், இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு ஒவ்வொரு வியாழன் என்றும் குறிப்பாக உபதேசம் செய்து வந்தார்கள் என்று குறிப்பிடும் பொழுது இமாம் கஷ்மீரி குறிப்பிட்ட நாட்களில் உபதேசம் செய்வதை அனாச்சாரமாக பித்அத்தாக நான் பார்க்கவில்லை என்ற கருத்தை மேல் கூறப்பட்ட நபித்தோழரின் செயலின் அடிப்படையில் முன் வைக்கிறார்கள்.
அதன் ஓரக் குறிப்பில் பித்அதுகளின் வகைகள் என்ன ? அதன் அபாயம் இறை நம்பிக்கையாளர்களுக்கு எந்த அளவு இருக்கும் என்ற கருத்தையும் தெளிவுபடுத்துகிறார்கள்.
அப்பொழுது அவர்கள் காலத்தில் மிகவும் பிரபலயமாக கருதப்பட்ட இரண்டு முக்கியமான அறிஞர்களை பித்அத்திற்கு எதிராக களம் கண்டவர்களை அங்கு குறிப்பிடுகிறார்கள்.
முதலாமவர் தக்வியதுல் ஈமான் என்ற புத்தகத்தை எழுதிய அஷ்ஷேக் ஷாஹ் இஸ்மாயீல் ஷஹீது ரஹிமஹுல்லாஹ்,
இந்தியாவிற்கு ஹதீஸ் கலையை முறையாக அறிமுகம் செய்தவரான இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளை.
பாட்டனாரை போன்று மார்க்கத்தை ஆழமாக விளங்கி அனாச்சாரங்கள் பித்அத்துகள் போன்ற மூடநம்பிக்கைகளை கடுமையாகச் சாடினார் எழுதினார்,
இந்த புத்தகத்தை இமாம் கஷ்மீரி தனது புகாரி பாடத்தில் கூறும் பொழுது சற்று அதிகமாகவே கடும்போக்கில் இமாம் இஸ்மாயில் தங்களது நூலில் பித்அத்தை கண்டித்திருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இமாம் அவர்கள் இன்னொரு புத்தகம் பித்அத் ஷிர்கை கண்டித்து எழுதி இருக்கிறார்கள்.
"யீழாஹு அல்ஹக்கி அஸ்ஸரீஹி பீஃ அஹ்காமி அல்மய்யிதி வழ் ழரீஹ்"
" إيضاح الحق الصريح في أحكام الميت والضريح"
மண்ணறைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த அனாச்சாரங்கள் ஷிர்குகளை கண்டிருக்கிறார்கள்.
என்று இமாம் இஸ்மாயில் ஷஹீத் ரஹிமஹுல்லாஹ் அவர்களை சிலாகித்து கூறி அதே காலகட்டத்தில் வாழ்ந்த அரபு நாட்டில் மிகவும் பிரபலியமாக பேசப்பட்டு வந்த இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்கள்.
பின்பு ஓரக் குறிப்பில் பயன்பாடு (فائدة) என்ற ஒரு தலைப்பில் நஜ்தி ஒரு மடையர் பலரை இறை மறுப்பாளராக மாற்றியவர் , காபிராக ஆக்கியவர் என்று பைழுல் பாரி புகாரி கிரந்தத்தின் விளக்க உரையில் எழுதப்பட்டிருக்கிறது.
இமாம் நஜ்தி பித்அதை கண்டித்தார்கள்
என்று இமாம் கஷ்மீரி தனது பாடத்தில் கூறிய விஷயங்களை மாற்றுக்கருத்துடையவர்கள் விட்டுவிட்டு இந்த வரிகளை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.
எனவே முந்தைய தேவ்பந்திய உலமாக்களில் சிலர் வஹ்ஹாபியத்தை எதிர்த்து விமர்சனம் செய்து வந்தார்கள்.
கூடுதலாக தேவ்பந்து இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த அல்லாமா கலீல் அஹமத் ஸஹரான்பூரி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இமாம் நஜ்தி அவர்களை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு அடிப்படை காரணம் என்னவென்றால் இமாம் நஜ்தியுடைய சில மாணவர்கள் அந்த காலத்தில் எழுதப்பட்ட சிறந்த சில புத்தகங்களை எரித்து விட்டார்கள் சில குழப்பங்களை செய்து விட்டார்கள் கூடுதலாக மக்கா முக்கர்ரமாவில் அஷ்ஷேக் அஹ்மத் ஜைனி தஹ்லான் கடும் விமர்சனம் செய்து வந்ததால் எமன் தேசத்து சில ஹாஜிகளை அவர்கள் அவமதிப்பு செய்ததால் எமன் தேசத்தின் அன்றைய மிகப் பெரிய அறிஞரான ஷவ்கானி ரஹிமஹுமுல்லாஹ் சில புத்தகங்களில் இமாம் நஜ்தியை பற்றி தனது பிரபலமான புத்தகமான அல்பத்ருத் தாலிஃ ( البدر الطالع الشوكاني) ல் விமர்சனம் செய்து விடுகிறார்கள்.
இந்த செய்திகள் முழு உலகிலும் குறிப்பாக இந்தியாவில் பரவத் தொடங்கியதில் தலை சிறந்த உலமாக்களும் இமாம் நஜ்தியை பற்றி ஆய்வு செய்யாமல் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டார்கள் இதுவே பிற்காலத்தில் முஅத்தா மாலிக் ஹதீஸ் கிரந்தத்திற்கு விரிவுரை எழுதிய இந்தியாவின் மிகப்பெரிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் ஸகரிய்யா ரஹிமஹுல்லாஹ் அல்லாமா அன்வர்ஷா கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கல்வி கற்ற 1927 ல் தாருல் உலூம் தேவ்பந்தில் பட்டம் பெற்ற அறிஞர் முஹம்மது மன்ஸுர் நுஃமானி ரஹிமஹுல்லாஹ் அவர்களை உருது மொழியில் இமாம் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி தொடர்பாக சரியான கருத்துக்களை முறையாக கோர்வை செய்து இமாம் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ரஹிமஹுல்லாஹ் மீது படிந்திருக்கும் கரைகளை நீக்கி முறையான ஆய்வு நூலை எழுத கட்டளையிட்டார்கள்.
முன்னாள் தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அல்லாமா காரீ தய்யுப் ஸாஹிப் அவர்களும் இதை புத்தகமாக அச்சிடும்படி அறிஞர் நுஃமாணி அவர்களுக்கு கூறியிருக்கிறார்கள் சுமார் 50 வருடங்களுக்கு முன்பாகவே இந்த புத்தகம் அரபு மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
அத்திஆயா முகஸ்ஸபாஃ லித்த முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி
الدعاية المكثفة ضد محمد بن عبد الوهاب النجدي
முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்திக்கு எதிரான பரப்புரைகள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
அதே காலகட்டத்தில் இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களைப் பற்றி சிலாகித்து உண்மையான அவர்களின் மார்க்க பணிகளை இந்தியாவைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞரான அஷ்ஷேக் மஸ்ஊத் ஆலம் நத்வி ரஹிமஹுல்லாஹ்
அல்முஸ்லிஹ் அல்மழ் ழூம்
المصلح المظلوم
அநீதம் இழைக்கப்பட்ட சீர்திறுத்தவாதி
என்ற தலைப்பில் நேர்த்தியான புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்கள்.
இந்தியாவின் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளரும் சிந்தனையாளருமான இமாம் அபுல் ஹசன் நத்வி ரஹிமஹுல்லாஹ் தங்களது புத்தகமான ரிஜாலுல் பிஃக்ரி வத்தஃவா
رجال الفكر و الدعوة
(Shah umari அவர்கள் தமிழில் இந்த புத்தகத்தை மொழி பெயர்த்திருக்கிறார்கள் )
இமாம் நஜ்தி பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் நவாப் சித்தீக் ஹஸன் கான் அல்கின்னூஜி
ரஹிமஹுல்லாஹ் தங்களது புத்தகமாகிய இத்திஹாபுஃ அன்நுபலா
اتحاف النبلاء
என்ற புத்தகத்தில் இமாம் நஜ்தியை ஸ்லாஹித்து அவர்களின் உண்மையான சேவைகளை எடுத்து கூறி இருக்கிறார்கள்.
"காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய் ", என்ற அடிப்படையான ஒரு மூல மந்திரத்தை நாம் இந்த அறிஞர்களின் புத்தகங்களின் முலம் புரிய முடிகிறது.
அஷ்ஷேக் முஹம்மது மன்சூர் நுஃமானி அவர்கள் தங்களது புத்தகத்தில் கூடுதலான ஒரு சுவாரசியமான விஷயத்தை குறிப்பிடுகிறார்கள்,
பைழுல் பாரி என்ற புகாரி கிரந்தத்தின் விளக்க உரை இமாம் கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ் அவர்களினால் எழுதப்பட்ட புத்தகமல்ல அவர்களின் வகுப்பில் கலந்து கொண்ட அவர்களின் மாணவரான அறிஞர் பதுருல் ஆலம் மீரட்டி மதனி அவர்கள் ஒன்று சேர்த்த கோர்வை.
இமாம் கஷ்மீரி அவர்கள் மதினாவில் தங்கி இருக்கும் பொழுது இந்த புத்தகத்தை சரி செய்யுமாறும் பார்வையிடும் மாறும் படதடவைகள் முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால் இந்த புத்தகம் அவர்களால் சரிபார்க்கப்படவில்லை.
எனவே இமாம் நஜீதி அவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இமாம் கஷ்மீரியின் வார்த்தைகள் கிடையாது.
காரணம் ஷெய்குல் ஹிந்த் என்று சொல்லப்படக்கூடிய முப்தி மஹ்மூதுல் ஹஸன், ரஷீத் அஹமத் கங்கோஹி, அஷ்ரப்ஃ அலி தானவி ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் இமாம் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் புத்தகமான தக்வியதுல் ஈமானை பாராட்டி இருக்கிறார்கள் அதை மக்களிடம் படிக்குமாறு ஆர்வப்படுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு இணையாகவே இணை வைப்பையும் அனாச்சாரத்தையும் எதிர்த்து எழுதிய இமாம் நஜ்தி அவர்களை தவறாக விமர்சித்து இருப்பது இமாம் கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அந்தஸ்துக்கு தகுந்த ஒன்று அல்ல ,
இதை அவர்கள் செய்திருக்கவும் மாட்டார்கள் என்று பைழுல் பாரி என்ற புகாரி கிரந்தத்தின் விரிவுரை புத்தகத்தின் முன்னுரையில் அன்றைய காலத்து மிகப்பெரிய அறிஞரான பாகிஸ்தானை சேர்ந்த யூஸுப் பின்னூரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
தமிழில் கூட மிகத் தெளிவாக பல வருடங்களுக்கு முன்பு வெளியான இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ரஹிமஹுல்லாஹ் பற்றிய மிகத் தெளிவான வாழ்க்கை வரலாறு நூலாக பிடிஎஃப் இல் இருக்கிறது,
வாசிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும் 👇
எனவே இன்றைய சமூகத்தின் நிகழும் மிகப்பெரிய துன்பம் என்னவென்றால்
புத்தக வாசிப்பு என்பது அறவே குறைந்து போய்விட்டது, தீர விசாரிக்காமல் ஆய்வுகள் செய்யாமல் தலை சிறந்த அறிஞர் பெருமக்களை விமர்சிப்பதும் இழிவு படுத்துவதும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.
சவுதி அரேபியாவின் மிகப் பிரபலமான அறிஞரான அஷ்ஷேக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் ஒரு உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்கள் இந்தியாவில் பித்அத்தையும் அனாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் ஒரு அறிஞர் இமாம் நஜ்தியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்களாம்.
ஒரு நாள் அகீதா இஸ்லாமிய கொள்கை என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு சிறு நூலை அந்த அறிஞரிடம் கொடுத்து வாசிக்க சொன்னார்களாம், அவரது நூலை படித்து விட்டு எனது வாழ்நாளில் இவ்வளவு தெளிவான ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை நான் பார்க்கவில்லை என்று சிலாகித்துக் கூறினாராம் இந்த புத்தகத்தை கொடுத்தவர்கள் அந்த புத்தகத்தின் அட்டை முதல் பக்கத்தை அகற்றிவிட்டு கொடுத்திருக்கிறார்கள் பின்பு சொன்னார்களாம் காலம் முழுவதும் நீங்கள் எந்த அறிஞரை பற்றி விமர்சித்து வந்தீர்களோ அவர் எழுதிய கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவக் கொள்கை) என்ற புத்தகத்தை தான் நீங்கள் இப்பொழுது புகழ்ந்து சொல்கிறீர்கள் என்று சொன்னார்களாம்.
சமீபமாக ஷீயாக்களில் மிகவும் உயரிய பட்டத்தை பெற்ற அறிஞர் ஹுஸைன் அல்முஅய்யித் (ஈராக் நாட்டைச் சேர்ந்த அறிஞர்) பல புத்தகங்கள் அரபு மொழியில் எழுதி இருக்கிறார் ,ஷீஆக்களை விமர்சிக்க கூடிய ஸலஃபி அறிஞர் எழுதிய ஒரு புத்தகத்தை தாருங்கள் என்று கூறி அதற்கு மறுப்பு தருகிறேன் என்று ஒரு புத்தகத்தை கேட்டிருக்கிறார்.
அஷ்ஷேக் நாஸிர் பின் அப்துல்லாஹ் அல்கிபாஃரி ஹஃபிழஹுல்லாஹ் (மக்கா உம்முல் குறா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்) அவர்களின் மிகப் பிரபலியமான ஷீஆக்களின் கொள்கைகளை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகமான
உஸுல் மத்ஹபிஷ் ஷீஆ இமாமிய்யா அல்இஸ்னை அஷரிய்யா
اصول مذهب الشيعة الإمامية الاثني عشرية
என்ற புத்தகத்தை கொடுத்திருக்கிறார்கள் இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்த ஷீஆக்களின் முன்னோடி அறிஞர் என்று சொல்லப்படக்கூடிய ஹூசைன் அல்முஅய்யிது தவ்பா செய்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறிவிட்டார்.
இன்று ஷீஆக்களுக்கு மிகவும் தலைவலியாகவும் சிம்ம சொப்பனமாகவும் கருதப்படுகிறார்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : المائدة 5:54)

No comments:

Post a Comment